$1.1 பில்லியனுக்கு விற்கப்பட்ட ‘வீலொக் பிளேஸ்’ பெயர் மாற்றம் கண்டுள்ளது

$1.1 பில்லியனுக்கு விற்கப்பட்ட ‘வீலொக் பிளேஸ்’ பெயர் மாற்றம் கண்டுள்ளது

படம்: ஹாங்காங் லேண்ட்

12 Nov 2026 - 4:42 pm

1 mins read

‘வீலொக் பிளேஸ்’ (Wheelock Place) கட்டடம் ‘லேண்ட்மார்க் ஆர்ச்சர்ட்’ (Landmark Orchard) எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

சொத்து மேம்பாட்டு நிறுவனமான ‘ஹாங்காங் லேண்ட்’ (Hongkong Land), ஹாங்காங்கிற்கு வெளியே ‘லேண்ட்மார்க்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

ஹாங்காங் லேண்ட் நிறுவனத்தின் ‘சிங்கப்பூர் மத்திய தனியார் சொத்துச் சந்தை நிதியம்’ (Singapore Central Private Real Estate Fund) அந்த ஆர்ச்சர்ட் சாலைச் சொத்தை வாங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை (நவம்பர் 12) இந்தப் புதிய பெயர் நடப்புக்கு வந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது.

ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ‘வார்ஃப் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி’ (Wharf Real Estate Investment Company) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 1.1 பில்லியன் வெள்ளி வழங்க அந்த நிதியம் கடந்த ஜூலை மாதம் ஒப்புக்கொண்டது. 2026 பிப்ரவரியில் தொடங்கப்பட்டதிலிருந்து அந்த நிதியம் மேற்கொண்ட முதல் கையகப்படுத்தல் நடவடிக்கை இது.

ஆர்ச்சர்ட் சாலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்துள்ள 21 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அலுவலகங்களும் கடைகளும் உள்ளன. மேலும் அது ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அலுவலக, சில்லறை வர்த்தக வாடகைதாரர்கள் அந்தப் புதிய பெயரின்கீழ் தொடர்ந்து செயல்படுவார்கள்.

அந்தச் சொத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஹாங்காங் லேண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அது குறித்த கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்