சிங்கப்பூரில் கணிசமான விகிதத்தில் இளையர்கள் மோசமான அல்லது மிக மோசமான மனச்சோர்வு, மனப்பதற்றம் (anxiety), மனவுளைச்சல் ஆகியவற்றுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
மனநலக் கழகம் (IMH), இளையர்களின் மனநலன் குறித்து சிங்கப்பூர் முழுவதும் நடத்திய கருத்தாய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. மனநலக் கழகம் இத்தகைய கருத்தாய்வை நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
கருத்தாய்வின் முடிவுகளை மனநலக் கழகம் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) வெளியிட்டது.
15லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளையர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர், பெரும்பாலான நேரங்களில் மிகுந்த கவலை, மன அழுத்தத்துடன் இருந்ததாக தேசிய இளையர் மனநல ஆய்வு (National Youth Mental Health Study) என்றழைக்கப்படும் அந்தக் கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது. இணையத் துன்புறுத்தலுக்கு ஆளானோர், தங்களின் உடல் வாகு குறித்தப் பெரும் கவலை கொண்டவர்கள், ஒரு நாளில் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் ஆகியோரிடையே ஓரளவாவது மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இளையர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மோசமான மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளானது என்றப் புள்ளி விவரம், இதன் தொடர்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் பதிவானவற்றைப் போன்றே இருப்பதாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவை வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக 15லிருந்து 24 வயதுக்கு உட்பட்டோருக்கிடையே மனச்சோர்வு, மனப்பதற்றம், மனவுளைச்சலுக்கான அறிகுறிகள் அதிகம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலாய் சமூகத்தினருக்கு இது பொருந்தும்.
2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் 2,600 சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளைக் கொண்டு இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
கருத்தாய்வில் பங்கேற்றவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விகளை நிரப்பவேண்டியிருந்தது. பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் நேரத்தை செலவிட்டதற்காக 50 வெள்ளி கட்டணம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் இளையர்களிடையே மனப்பதற்றம்தான் ஆக அதிகமாகக் காணப்படும் மனநலப் பிரச்சினை என்பதும் இந்தக் கருத்தாய்வில் தெரிய வந்துள்ளது.