புதிய கல்வியாண்டில் கால்பதிக்கவிருக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விப் பயணத்தில் உதவிக்கரம் நீட்டும் வகையில், 5,600 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு $1.7 மில்லியன் மதிப்பிலான உதவிகளை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) வழங்கியது.
சனிக்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற சிண்டாவின் 18வது ‘பள்ளிக்குத் திரும்புவோம்‘ நிகழ்ச்சியில் 8,500 மாணவர்களுக்குத் தலா $200 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த உதவி கிடைக்கப்பெற்ற தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அடுத்த கல்வியாண்டுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், எழுதுபொருள்கள், பள்ளிக் காலணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று சிண்டா கூறியது.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, ‘பள்ளிக்குத் திரும்புவோம்’ திட்டத்தின் வாயிலாகப் பற்றுச்சீட்டு பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதைச் சுட்டினார்.
மேலும், இது பள்ளிகள், குடும்பச் சேவை நிலையங்கள், சுய உதவிக் குழுக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பறைசாற்றுகிறது என்ற அவர், ‘‘இது மிகவும் முக்கியம். ஏனெனில், பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுகையில் இன்னும் திரளான மாணவர்களைச் சென்றடையலாம். ஏராளமான மாணவர்களும் பயன்பெறுவர்,’’ என்றார்.
சிங்கப்பூர் முன்னுரிமை தரும் விஷயங்களில், சிறார் வாழ்வு செழிப்புறச் செய்யும் வகையில் முழுமையான மேம்பாட்டில் கவனம் செலுத்துவதும் அடங்கும் என்றும் குறிப்பிட்டார் அவர்.
தனிநபர் வருமானத்திற்கான தகுதியைக் கடந்த ஆண்டு சிண்டா $1,600 ஆக உயர்த்தியதால் அதிகமான குடும்பங்கள் உதவி பெறுவதற்கு தகுதி பெறமுடிந்தது. இந்த ஆண்டு 3,688 மாணவர்கள் முதன்முறையாக சிண்டாவின் பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.
இதில் பயன்பெற்ற மாணவர்களில் ரஃபேல் சரண் பாலமுருகன், 13, ஜைரஸ் தேவன் பாலமுருகன், 15, இருவரும் அடங்குவர். உதவி குறித்து பேசிய அவர்களின் தாயார் திருவாட்டி பதிமா பவானி ராபர்ட், “உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் சார்ந்த சுமையை இந்தப் பற்றுச்சீட்டுகள் குறைக்கின்றன,’’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சி குறித்து பேசிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், ‘‘பள்ளிக்குத் திரும்புவோம் திட்டம், வெறும் நிதியாதரவு நல்குவது மட்டுமன்று, அது குடும்பங்களை ஆதரிக்கும் திட்டம்.
“புத்தகங்களும் காலணிகளும் முக்கியம். ஆனால், தன்மதிப்பும் தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியம். அவ்வகையில், நன்முறையில் ஆதரிக்கப்படுவதாகச் சிறார் உணரும்போது, பள்ளி வாழ்க்கையையும் தங்கள் எதிர்காலத்தையும் மேம்படுத்த அவர்கள் சிறந்த முறையில் ஆயத்தமாவர்,’’ என்றார்.

