மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலையேற்றத்தைச் சமாளிக்க, சிங்கப்பூர் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) $1 பில்லியன் மதிப்பிலான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது.
இந்நிலையில், அத்திட்டத்தால் டிபிஎஸ் வங்கி, ஷெங் சியோங் பேரங்காடி உள்ளிட்ட நிறுவனங்கள் நேரடியாகப் பலனடையும் என ‘ஆர்எச்பி’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
“உள்நாட்டுப் பயனீடு, புறநகர்ச் சில்லறைச் சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிலப் போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு இந்த ஆதரவு கைகொடுக்கும். அதே வேளையில், விமானப் போக்குவரத்துத் துறைக்கான சவால்கள் நீடிக்கும்,” என்று ஆர்எச்பி ஆய்வாளர் சேகர் ஜெய்ஸ்வால் கூறினார்.
2027ல் வழங்கப்படுவதாக இருந்த $500 மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகள், இவ்வாண்டு ஜூன் மாதத்திலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இது, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கக் கைகொடுக்கும்.
இது அத்தியாவசியப் பொருள்களை வாங்க மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதால் பேரங்காடிகளுக்கும் நகர்ப்புறங்களில் உள்ள கடைத்தொகுதிகளுக்கும் அதிகமானோர் வந்துசெல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், பள்ளிப் பேருந்து, முதியோர் நடமாட்டம், உடற்குறையுள்ளோர் சேவைகள் போன்ற அத்தியாவசியப் போக்குவரத்துச் சேவைகளுக்கும் அரசாங்கத்தின் நிதி உதவி கிடைக்கும்.
இது, ‘கம்பஃபர்ட் டெல்குரோ’ நிறுவனத்தின் பேருந்துப் பிரிவிற்குக் கைகொடுக்கும் எனச் சொல்லப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள டாக்சி ஓட்டுநர்களுக்கான ரொக்க உதவி, அந்நிறுவனத்தின் வாகன எண்ணிக்கை குறையாமல் இருக்க உதவும்.
தொடர்புடைய செய்திகள்
எரிசக்தி விலை உயர்வு, பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என்பதால், டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் லாப வரம்பு அதிகரிக்கும் என ஆர்எச்பி கணித்துள்ளது.
மேலும், மின்சாரக் கட்டண உயர்வு ‘செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்’ போன்ற மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும்.
அதே வேளையில், எரிபொருள் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் விமான, கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கும் சுற்றுலாத் துறைக்கும் சவால்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

