தொடக்கப்பள்ளி மாணவர்களைத் துன்புறுத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

தொடக்கப்பள்ளி மாணவர்களைத் துன்புறுத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

2 mins read
9fbdda37-36d2-4cb4-8a31-a07dd2a8a4ee
ஆடவரின் துன்புறுத்தலின் விளைவாக, ஆறு வயது சிறுவனுக்கு விலா எலும்பு முறிவு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. அந்தச் சிறுவன் ஒன்பது நாள்களுக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் செய்ய வேண்டியிருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தனியார் கல்வி நிலையம் ஒன்றில் தனது பொறுப்பிலிருந்த தொடக்கப்பள்ளி மாணவர்களைத் துன்புறுத்திய ஆடவர் ஒருவருக்கு, 9 ஆண்டு10 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டுப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

31 வயதான அந்தக் குற்றவாளி சிங்கப்பூர் குடிமகன். அவர் சிறுவர்களைக் குத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஆறு வயதுச் சிறுவனைச் சிறுநீரைக் குடிக்குமாறும் கட்டாயப்படுத்தினார். அந்தச் சிறுவன் பிற்பகல் 3.45 மணி முதல் மறுநாள் காலை வரை ‘புஷ்-அப்’ (push-up) நிலையிலேயே இருக்கும்படியும் கட்டாயப்படுத்தப்பட்டான்.

இந்த ஆடவரின் துன்புறுத்தலின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு விலா எலும்பு முறிவு, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது. அந்தச் சிறுவன் ஒன்பது நாள்களுக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் செய்ய வேண்டியிருந்தது.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஜூலை 9ஆம் தேதி ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவருக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) தண்டனை விதிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில் இந்தக் குற்றங்கள் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வயது ஆறு முதல் 11 வயதுக்குட்பட்டது. சிறுவர்களின் பாதுகாப்பு கருதி நீதிமன்றம் குற்றவாளியின் பெயரை வெளியிட அனுமதிக்கவில்லை.

மாணவர்களைக் கவனித்துக்கொள்ளும் நம்பிக்கையான பொறுப்பில் இருந்த ஆடவர் அதை மீறி, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியதாக அரசுத் தரப்பு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் வாதிட்டது.

கல்வி நிலையத்தில் இருந்த மற்ற சிறுவர்களையும் ஆடவர் துன்புறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் காயத்தைக் கண்ட ஆசிரியர்கள் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து மறுநாள் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவரின் அறிக்கைப்படி மாணவரின் உடலில் பல காயங்கள் இருந்தது பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குற்றவாளிமீது விசாரணைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்