சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 11 பேர் கைது

சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 11 பேர் கைது

2 mins read
66533799-e904-417f-94bb-e3856244784c
பிடிபட்டோர் அனைவரும் 21 வயதிற்கும் 43 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என மனித வள அமைச்சும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து திங்கட்கிழமை (மார்ச் 16) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.  - படம்: குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம்

குடிநுழைவு தொடர்புடைய குற்றம் புரிந்தோரைப் பணியமர்த்தும் உணவு, பான நிறுவனங்களைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் மார்ச் 10ஆம் தேதி அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சிங்கப்பூரில் தங்குவதற்கான அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 11 நேபாள நாட்டினரை அதிகாரிகள் கைது செய்தனர்.

மனிதவள அமைச்சும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் இணைந்து இந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டன.

பிடிபட்டோர் அனைவரும் 21 வயதிற்கும் 43 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என அமைச்சும் ஆணையமும் இணைந்து திங்கட்கிழமை (மார்ச் 16) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

தங்களின் சமூக வருகை அனுமதி அட்டை காலாவதியான பின்னரும் அவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் இருவர், இரு சிங்கப்பூரர்களால் பணியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த இரு சிங்கப்பூரர்களிடமும் தற்போது குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

“குடிநுழைவு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அல்லது பணி வழங்கிய பிற நபர்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,” என அவை தெரிவித்துள்ளன.

பிடிபட்ட 11 பேருடன் சேர்த்து, வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் இருவரிடமும் ‘எஸ் பாஸ்’ அட்டை வைத்திருக்கும் ஒருவரிடமும் வேலைவாய்ப்பு தொடர்பான விதிமீறல்களுக்காக மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது மூன்று பிரம்படிகளும் அல்லது $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குடிநுழைவுக் குற்றவாளிகள் நாடுகடத்தப்படுவதுடன், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் தடை விதிக்கப்படும்.

அதேநேரத்தில், அனுமதிக்கப்பட்ட தங்கும் காலம் முடிந்தவர்களையோ சட்டவிரோதக் குடியேறிகளையோ பணியில் அமர்த்துவோர்க்கு ஆறு மாதங்கள் முதல் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனையும் $6,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்