ஜூரோங் லேக் வட்டாரத்தில் 1,200 தனியார் வீடுகள் வரை விற்பனைக்கு வருகின்றன

ஜூரோங் லேக் வட்டாரத்தில் 1,200 தனியார் வீடுகள் வரை விற்பனைக்கு வருகின்றன

2 mins read
b1aa20c3-a638-4b3e-bdef-e61deb88c085
ஜூரோங் லேக் வட்டார மேம்பாட்டுத் திட்டத்தில் குறைந்தது 40,000 சதுரமீட்டர் அலுவலக இடமும் இடம்பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்ஜ

ஜூரோங் லேக் வட்டாரத்தில் 1,200 தனியார் வீடுகள் வரை வழங்கக்கூடிய நிலத்தொகுதி விற்பனைக்கு வந்துள்ளது. வட்டாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அது அமைகிறது.

நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

டவுன் ஹால் லிங்க்கில் உள்ள இந்த 3.7 ஹெக்டர் நிலப்பரப்பு, ஜூராங் லேக் வட்டாரத்தின் புதிய பகுதியில் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தொடங்குவதற்குத் துணைபுரியும்; அத்துடன் வீடமைப்புக்கும் அலுவலக இடங்களுக்குமான தேவைகளை நிறைவேற்றவும் அது ஆதரவாக இருக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் குறைந்தது 40,000 சதுரமீட்டர் அலுவலக இடமும் அதிகபட்சம் 1,200 தனியார் வீடுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் சில்லறை வர்த்தகம், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றுக்கு ஒட்டுமொத்தமாக 44,000 சதுரமீட்டர் தரைப்பரப்பையும் இது கொண்டிருக்கும்.

“இப்பகுதியின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் தற்போதுள்ள அலுவலகங்கள், குடியிருப்புகள், சில்லறை வர்த்தகம், நிறுவனப் பயன்பாடுகள் முதலியவற்றுக்கு எதிர்கால ஒருங்கிணைந்த மேம்பாடு பக்கபலமாக இருக்கும்,” என்று ஆணையம் தெரிவித்தது.

இந்தக் கட்டுமானத் தளம் ஜூராங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கப்படும். மேலும் 2032ல் திறக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குறுக்குத் தீவு ரயில் பாதை, நிலத்தடி பாதசாரிகள் இணைப்பையும் இது கொண்டிருக்கும்.

ஜூரோங் டவுன் ஹால் தேசிய நினைவுச்சின்னத்திற்கும் புதிதாக வரவிருக்கும் பூங்காவிற்கும் அருகில் கட்டுமானத் தளம் அமைந்துள்ளது. இந்தத் தளம், வட்டாரத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதில் அரசாங்கத்துடன் மேம்பாட்டு நிறுவனங்கள் கைகோப்பதற்கு உன்னத வாய்ப்பை வழங்குவதாக ஆணையம் குறிப்பிட்டது.

“சிங்கப்பூரின் நகர மையத்திற்கு வெளியே உள்ள மிகப் பெரிய பல பயன் வணிக நடுவமாக ஜூராங் லேக் வட்டாரத்தை மாற்றுவதற்கான முக்கியப் படியாக இந்த நிலத்தொகுதியின் அறிமுகம் அமைந்துள்ளது” என்று ஆணையம் கூறியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கட்டுமானத் தளத்திற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு, வரும் நவம்பர் 17ஆம் தேதி நண்பகலுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் தளம் 2023ஆம் ஆண்டு ஜூனில் ஏலக்குத்தகைக்கு விடப்பட்ட பெரிய நிலப்பரப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது என்று இஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்கஸ் சூ தெரிவித்தார். முந்திய ஏலக்குத்தகையின் ஏல விலை மிகவும் குறைவாய் இருந்ததாக ஆணையம் கருதியதால், அது யாருக்கும் வழங்கப்படவில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்