சிங்கப்பூரில் ‘பவர்பேங்க்’ எனப்படும் கையடக்க மின்தேக்கி தொடர்புடைய 58 தீ விபத்துகள் கடந்த ஆறாண்டுகளில் நிகழ்ந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்து உள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான நிலவரம் அது.
கடந்த ஆண்டில்தான் ஆக அதிகமாக அதுபோன்ற 13 தீ விபத்துகள் என்றும் அது கூறியுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய வினாக்களுக்குத் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) பதிலளித்த அந்தப் படை, மின்தேக்கி தொடர்புடைய 10 தீச்சம்பவங்கள் 2023ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டது.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் 11, 2020ஆம் ஆண்டு 6, 2019ஆம் ஆண்டு 7 என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விளக்கியுள்ளது.
அண்மையில் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் வைத்திருந்த மின்தேக்கியில் தீப்பற்றியதைத் தொடர்ந்து அந்த ரயிலில் பயணம் செய்த 650 பயணிகள் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது முதல் கையடக்க மின்தேக்கி தொடர்பான தகவல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் தென்கொரியாவில் ஏர் பூஷன் விமானத்தில் மின்தேக்கி தீப்பற்றியதில் அந்த விமானம் சேதமடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு விமானப் பயணிகள் தங்களது பயணத்தின்போது மின்தேக்கி பயன்படுத்த ஏராளமான விமான நிறுவனங்கள் தடை விதித்தன.
விமானத்திற்குள் மின்தேக்கி மூலம் இதர சாதனங்களுக்கு மின்னூட்ட ஏப்ரல் 1 முதல் அனுமதி இல்லை என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமான நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
விமானத்திற்குள் ‘யுஎஸ்பி போர்ட்’ (USB port) மூலம் மின்தேக்கிக்கு மின்னூட்டவும் அவை தடை விதித்துள்ளன.

