அரசு நீதிமன்றங்களுக்கு வெளியே மின்சிகரெட்டைப் பயன்படுத்தியபடி ஏப்ரல் 24ஆம் தேதியன்று ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பதின்ம வயதுப் பெண்ணின் வீட்டில் சுகாதார அறிவியல் ஆணையம் சோதனை நடத்தியுள்ளது.
அந்த 13 வயதுப் பெண் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்குத் தடுமாற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அது போதைப் புழக்கத்திற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (மே 13) குறிப்பிட்டது.
அதையடுத்து பெண்ணை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரின் வீட்டில் சோதனையிட்டு மின்சிகரெட் ஒன்றைக் கைப்பற்றினர். அதில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் எட்டொமிடேட் (etomidate) என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எட்டொமிடேட் அல்லது கெட்டமைன் திரவம் கொண்ட மின்சிகரெட்டுகள் ‘கேபோட்ஸ்’ (Kpods) என்றழைக்கப்படுகின்றன.
அத்தகைய மின்சிகரெட்டைப் பெண்ணுக்கு விற்ற 25 வயது ஆடவரைச் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் அடையாளம் கண்டு அவரைப் பிடித்தனர். ஆடவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு மின்சிகரெட்டிலும் போட்ஸ் எனும் மூன்று கருவிகளிலும் எட்டொமிடேட் இருந்தது கண்டறியப்பட்டது.
ஆடவர், அவரது 26 வயது மனைவி, பதின்ம வயதுப் பெண் ஆகிய மூவரும் விசாரணையில் உதவிவருகின்றனர்.
எட்டொமிடேட் என்ற வீரியமுள்ள பொருள் மருத்துவர்களின் கண்காணிப்பின்கீழ் வழங்கப்படவேண்டும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் குறிப்பிட்டது.
மற்றொரு சம்பவத்தில், பெருவிரைவு ரயிலுக்குள் மின்சிகரெட்டை பயன்படுத்திய 36 வயது ஆடவரைச் சுகாதார அறிவியல் ஆணையம் அடையாளம் கண்டது. ஏப்ரல் 18ஆம் தேதி ஆடவரின் சம்பவம் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவரின் வீட்டைச் சோதனையிட்ட ஆணையம் எந்த மின்சிகரெட்டையும் கண்டுபிடிக்கவில்லை. மின்சிகரெட்டை வீசிவிட்டதாகவும் ஆடவர் கூறினார். சம்பவத்தை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளின் பயன்பாடு சட்டவிரோதம். அவற்றை வாங்குவதோ, பயன்படுத்துவதோ, விற்பதோ குற்றமாகக் கருதப்படுகிறது.