அரசாங்கச் சொத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் இளையர்கள் 13 பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது.
பொதுத் தேர்தல் 2025க்கான வாக்களிப்பு நிலையங்களில் முதியோர், சிறப்புத் தேவையுடையோருக்காக வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை வியாழக்கிழமை (மே 1) வெளியிட்ட அறிக்கையில், இரு சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளையர்களிடம் விசாரணை நடத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் சம்பவம், ஏப்ரல் 28ஆம் தேதி (திங்கட்கிழமை), புளோக் 51A செங்காங் வெஸ்ட் அவென்யூவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் நடந்ததாகக் காவல்துறை கூறியது. அந்த இடம், குடியிருப்பாளர்கள் மே 3ஆம் தேதி வாக்களிப்பதற்கான வாக்கு நிலையமாகும்.
திங்கட்கிழமை இரவு 10.55 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது தேர்தல் துறைக்குச் சொந்தமான மூன்று சக்கர நாற்காலிகள் சேதமடைந்து காணப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக ஐவர் சந்தேகிக்கப்படுகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அந்தச் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்திப் பந்தயம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை விண்ணை நோக்கி வீசியதாகவும் கூறப்பட்டது.
இரண்டாவது சம்பவம், வியாழக்கிழமை (மே 1) புளோக் 176B பூன் லே டிரைவில் உள்ள மேற்கூரையுடன் கூடிய கூடைப்பந்துத் திடலில் நடந்தது. அந்த இடம், வாக்களிப்பு நிலையமாகச் செயல்படவிருக்கிறது.
தேர்தல் துறைக்குச் சொந்தமான ஒரு சக்கர நாற்காலி அந்த இடத்தில் சேதப்படுத்தப்பட்டதாகவும் அதில் தொடர்பிருப்பதாக எட்டுப் பேர் சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.