கடலோரத் தற்காப்புச் சோதனைத் திட்டங்களுக்கு $14 மில்லியன்

கடலோரத் தற்காப்புச் சோதனைத் திட்டங்களுக்கு $14 மில்லியன்

https://www.straitstimes.com/singapore/environment/living-lab-14-million-awarded-to-projects-testing-coastal-defences-in-singapore
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2026 - 8:00 pm

2 mins read

சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளில் கடல்மட்ட உயர்வு மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஐந்து புதிய திட்டங்களைச் சோதனை செய்ய பொதுப் பயனீட்டுக் கழகம் ஏறத்தாழ $14 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார உச்சநிலை மாநாட்டில் புதன்கிழமையன்று (ஜூன் 17) பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“ஆய்வு, மேம்பாட்டுத் திட்டங்களில் பல்கலைக்கழகங்களையும் தொழில்துறை நிறுவனங்களையும் இணைத்துக்கொள்வதன் மூலம் முன்வைக்கப்படும் நல்ல ஆலோசனைகளை தீர்வுகளாக நடைமுறைப்படுத்தலாம். இதையடுத்து, அவற்றை உள்கட்டமைப்புகளாக உருவாக்கலாம்.

“கடல்மட்ட உயர்வு, வெள்ள அபாயம் ஆகியவற்றை சிங்கப்பூரும் உலக நாடுகளும் எதிர்நோக்குகின்றன. ஒன்று மட்டும் நிச்சயம். தனிநாடாக இருந்து தீர்வு காண முடியாது. ஒன்றிணைந்து செயல்பட்டால் வேகமாக மேம்படலாம்,” என்று அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அதிநவீனத் திட்டங்கள், 2027ஆம் ஆண்டு முதல் செந்தோசாவின் தஞ்சோங் ரிமாவ், சாங்கி, ஈசூன் அணை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆகிய கடலோரப் பகுதிகளில் சோதனை செய்யப்படவுள்ளன.

இதன் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் இவற்றை நாடு முழுவதும் பெரிய அளவில் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, சாங்கி கடற்கரையில் கடல்வாழ் உயிரினங்கள் செழித்து வளரக்கூடிய, கடல்மட்ட உயர்வுக்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் ‘உயிரோட்டமுள்ள கடல் அரண்’ ஒன்று சோதனை செய்யப்படவுள்ளது.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் சுற்றுப்புறத்துக்கு ஏற்புடைய கடல் அரண் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூரின் வெப்பமண்டலப் பருவநிலைக்கு ஏற்ப இது வடிவமைக்கப்படவுள்ளது. மனித உடலைப்போல, இந்த அணைச் சுவர்களில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால், அதிலுள்ள சிறப்புக் கலவை மூலம் அது தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் திறன் கொண்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

சிங்கப்பூரின் ஈரப்பதம், வெப்பநிலை, அலையேற்ற நிலைகள், சூரியக் கதிர்வீச்சு, கடல் மட்டக் கணிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிங்கப்பூரின் வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்