தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
எஸ்ஜி 60 கொண்டாட்டம்; சிங்கப்பூர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம்:

$143 பில்லியன் வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

2 mins read
4a4e2cdf-c696-43ba-a01a-4294751691fe
நாடாளுமன்ற அவைத் தலைவர் குமாரி இந்­தி­ராணி ராஜா. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில்  $143.1 பில்லியன் மதிப்பிலான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) அன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு நவம்பருக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது நிறைவேறிய  வரவுசெலவுத் திட்டம் நடப்பில் உள்ள அரசின் ஆட்சிக்காலத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள கடைசி பட்ஜெட் ஆகும்.

வர­வி­ருக்­கும் நிதி­யாண்­டிற்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் குமாரி இந்­தி­ராணி நிறை­வு­ செய்­வ­தற்கு முன்­ன­தாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

ஒவ்வோர் அரசாங்கத்தின் பதவிக்காலமும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தாலும், நடப்புப் பதவிக்காலம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாகவும், ஒரு தலைமுறையின் இடரைக் களைய போராட வேண்டியிருந்ததாகவும் கூறினார் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா.

எனவே அதன் அடிப்படையில் தற்போதைய ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களை மூன்று அத்தியாயங்களாக வகைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார் குமாரி இந்திராணி.

“முதலாம் அத்தியாயம் இருளில் கடந்துசென்றது. அது பெருந்தொற்றின் காலம்; தடுப்பூசிகள் நம்மிடமில்லை; ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டு துவங்கிய 14வது நாடாளுமன்றத்தின்போது நாம் முழுமையாக நடமாட்டக் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவரவில்லை. நிச்சயமற்ற சூழல். இந்த இடரைச் சமாளிக்க தேவையான நிதிவளங்களுடன் இச்சூழலை எதிர்கொண்டோம்,” என்று நினைவுகூர்ந்தார் குமாரி இந்திராணி.

இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேறிய வரவுசெலவுத் திட்டங்களைச் சுட்டிய குமாரி இந்திராணி, இந்தத் திட்டங்கள் வாயிலாக ‘நமது வாழ்க்கை, நமது வேலை நமது எதிர்காலம்’ தொடர்பிலான உறுதிமொழிகளை நிறைவேற்ற முடிந்ததாக விளக்கினார்.

இரண்டாம் அத்தியாயம் 2022ஆம் ஆண்டில் துவங்கியது என்றும் அப்போது இருளை கடந்து வந்த தேசம், மீட்சிக்கான  இலக்கை நோக்கி நகரத் தொடங்கியது என்றார் குமாரி இந்திராணி.

பொருளியல் மந்தநிலை சார்ந்த சூழலில் சிங்கப்பூரர்களின் உடனடி தேவைகளைச் சந்திப்பது மற்றும் நீண்டகால திட்டத்திற்கான பாதையையும் வகுக்கவேண்டியிருந்தது என்றார் குமாரி இந்திராணி.

“தற்போதைய வரவுசெலவுத் திட்டம் மூன்றாவது அத்தியாயம். அது சிங்கப்பூரர்களால் உருவாக்கப்பட்ட சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவும்  சிறப்பான, ஒளிமயமான எதிர்காலத்துக்கு உயிரோட்டம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர். 

நாடு அதன் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் சிங்கப்பூரர்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் வகையில் உபரி நிதிநிலை பெற்றிருப்பது  நன்மையானது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்