தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்கு $150 மில்லியன் செலவு

2 mins read
69b17171-1a8e-4533-8acb-c7ce1a8883ec
2026ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்கான வடிகால் உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தமது அமைச்சு மறுஆய்வு செய்வதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் ஃபூ கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படுவதைக் குறைக்க வடிகால் மேம்பாட்டுப் பணிகளுக்காக 2025க்கான நிதி ஆண்டில் ஏறத்தாழ $150 மில்லியன் செலவிடப்பட உள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பான ஆறு புதிய திட்டங்கள் இவ்வாண்டு தொடங்குகின்றன.

‘பிடோக் ஃபர்ஸ்ட் சப்சிடியரி டிரெய்ன்’ போன்றவை இதில் அடங்கும்.

மேலும் 19 வடிகால் மேம்பாட்டுப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.

ஜாலான் புசார் வட்டாரத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க சையது ஆல்வி நீர் வெளியேற்று நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புக்கிட் தீமா கால்வாய் மறுசீரமைக்கப்படுகிறது.

ரைஃபிள் ரேஞ்ச் சாலையிலிருந்து ஜாலான் கம்போங் சந்தேக் வரையிலான 900 மீட்டர் சாலைப் பகுதி அகலப்படுத்தப்படுகிறது.

கனமழை பெய்யும்போது புக்கிட் தீமாவில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

இந்நிலை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

2011ஆம் ஆண்டிலிருந்து வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்த இதுவரை $2.5 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்கான வடிகால் உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தமது அமைச்சு மறுஆய்வு செய்வதாக அமைச்சர் ஃபூ கூறினார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த கனமழை காரணமாக சிங்கப்பூரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு நாட்டில் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஃபூ பதிலளித்தார்.

வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க சமூக அளவில் குடியிருப்பாளர்களையும் வர்த்தகங்களையும் பொதுப் பயனீட்டுக் கழகம் ஈடுபடுத்துகிறது.

இவ்வாறு வடகிழக்கு பருவமழைக்காலத்துக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, வெள்ளத் தடுப்புகள், மணல் பைகள் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் வகையில் கனமழை பெய்யும் என்று முன்பே முன்னுரைக்கப்படுகிறது.

எனவே, தாழ்வான நிலப்பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்க இது உதவுகிறது.

“வெள்ள அபாயங்களைச் சமாளிப்பது ஒரு கூட்டு முயற்சியாகும். இதில் அரசாங்கம், நிறுவனங்கள், பொதுமக்களுக்கு பங்கு உள்ளது. வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வரத் தேவைப்படும் மீள்திறனை மேம்படுத்த பங்களிக்க வேண்டும் என்று அனைவரையும் ஊக்குவிக்கிறேன்,” என்று அமைச்சர் ஃபூ கூறினார்.

குறிப்புச் சொற்கள்