புதிதாக சேரும் தாதியருக்கு $15,000 ஊக்கத்தொகை

மருத்துவமனைகளில் நெருக்கடியைத் தீர்க்க மேலும் நூற்றுக்கணக்கான படுக்கைகள்

தாதியர் எண்ணிக்கையைப் பெருக்க புதிய $15,000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு, பொது மருத்துவமனைகளின் இடநெருக்கடியைத் தீர்க்க 2023 கடைசிக்குள் நூற்றுக்கணக்கான படுக்கைகள் சேர்க்கப்படவுள்ளன.

ஜூலை 19ஆம் தேதி ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்ற தாதியர் சிறப்புத் தேர்ச்சி விருதளிப்பு நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்த பல்வேறு நடவடிக்கைகளில் இவை உள்ளடங்கும். இந்நிகழ்ச்சியில் 125 தாதியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

படுக்கைப்பிரிவுகளின் இடப் பற்றாக்குறையையும் நீண்ட காத்திருப்பு நேரத்தையும் சமாளிக்க உதவும் பல்வேறு திட்டங்களை அமைச்சர் அறிவித்தார்.

தாதியருக்கான ஊக்கத்தொகை, கூடுதல் படுக்கைகள் தவிர, மருத்துவமனையில் கவனிப்பு தேவைப்படாதவர்களுக்கான மறுவாழ்வு பராமரிப்புச் சேவைகளும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு சுகாதாரப் பராமரிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. மக்கள்தொகை மூப்படைவதால் இந்தத் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் வயதானவர்கள், அதிக சிக்கலான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், பற்பல மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகமாக இருப்பதாகத் திரு ஓங் கூறினார்.

நோயாளிகளும் அதிக காலம் மருத்துவமனையில் தங்கியிருக்கின்றனர். சிங்கப்பூர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் சராசரிக் காலம் 6.1 நாள்களிலிருந்து 7 நாள்களாக அதிகரித்துள்ளது.

“இதனால் நமது மருத்துவமனை படுக்கைப்பிரிவுகள் பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன. அவசர சிகிச்சைப் பிரிவுகள் இதை அதிகமாக உணர்கின்றன. கேகே மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் சீனப் புத்தாண்டுபோல் இருக்கிறது.

“இந்த நிலைமை சிங்கப்பூருக்கு மட்டுமன்று. பெருந்தொற்றிலிருந்து விழித்தெழுந்த உலகம் எதிர்நோக்கும் புதிய சுகாதாரப் பராமரிப்புச் சூழல் இது. பிரிட்டன் போன்ற நாடுகளில் சுகாதாரப் பராமரிப்பு முதலீடுகளால் தேவைகளுக்கேற்ப ஈடுகொடுக்க முடியாததால் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அங்கு ஏழு மில்லியன் நோயாளிகள் சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்,” என்றார் திரு ஓங்.

இந்நிலைமைக்குத் தீர்வுகாண, மருத்துவமனைகளில் மேலும் 280 படுக்கைகளை சுகாதார அமைச்சு சேர்க்கவுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்தில் இருக்கும். இந்த மையம் செப்டம்பர் மாதம் திறக்கப்படவிருக்கிறது. அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் 20 படுக்கைகளும், கூ டெக் புவாட் மருத்துவமனையில் 100 படுக்கைகளும், செங்காங் பொது மருத்துவமனையில் 40 படுக்கைகளும் சேர்க்கப்படும். 2022ஆம் ஆண்டில் பொது மருத்துவமனைகளின் படுக்கைப்பிரிவுகளில் மொத்தம் 9,820 படுக்கைகள் இருந்தன.

மருத்துவமனையின் கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே கவனிப்பளிக்கும் “MIC@Home” (வீட்டில் நடமாடும் உள்நோயாளிப் பராமரிப்பு) எனும் மெய்நிகர் படுக்கைப்பிரிவுகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து 200ஆகக் கூட்டப்படும்.

மருத்துவமனையில் கவனிப்பு தேவைப்படாத அல்லது தாதிமை இல்லத்தில் சேர்வதற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கான இடைநிலைப் பராமரிப்பு வசதிகளும் கூட்டப்படும். இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அருகில் ஒன்றும் மத்திய வட்டாரத்தில் இரண்டும் அமைக்கப்படும். இவற்றில் மொத்தம் 340 படுக்கைகள் இருக்கும்.

தாதிமை இல்லங்களின் கொள்ளளவு இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 310 படுக்கைகளுடன் அதிகரிக்கும்.

கொவிட்-19 பெருந்தொற்றினால் தாமதமடைந்த உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் இவ்வாண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என்றும் திரு ஓங் தெரிவித்தார்.

படுக்கைகள் அதிகரிக்கப்படுவதால் தாதியருக்கான தேவையும் அதிகரிக்கும். இவ்வாண்டு 4,000 தாதியருக்குமேல் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கூறினார்.

ஆண்டின் முதல் பாதியில், பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் மொத்தமாக ஏறக்குறைய 2,000 புதிய தாதியரை வேலைக்குச் சேர்த்தன. ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 4,000 தாதியர் சேர்க்கப்படுவர். தனியார் துறையையும் சேர்த்தால், எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்றார் அவர்.

உபகாரச் சம்பளமின்றி தாதியர் துறையில் படித்து, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் அல்லது தாதிமை இல்லம் போன்ற பொதுச் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் வேலைக்குச் சேர்க்கும் தாதியருக்கு $15,000 ஊக்கத்தொகை கிடைக்கும். இது ஈராண்டுகளில் வழங்கப்படும்.

தாதியரை நீண்டகாலம் வேலையில் தக்கவைத்திருக்க சுகாதார அமைச்சு பரிசீலனை செய்கிறது என்றும் அதுபற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திரு ஓங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!