தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி ஈஸிலிங்க், சிம்ப்ளிகோ இணையத்தள மோசடி மூலம் $156,000 இழப்பு

1 mins read
3675dbb3-9009-496a-8d62-1b7ebcda3a5f
இம்மாதத்தில் மட்டும்  ஈஸிலிங்க், சிம்ப்ளிகோ தொடர்பான 97 மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போலியான ஈஸிலிங்க், சிம்ப்ளிகோ இணையத்தளங்கள் மூலம் இடம்பெற்ற தூண்டுகளவு (Phishing) மோசடிகள் மூலம் நடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை குறைந்தது $156,000 பணம் பறிபோனது.

இம்மாதத்தில் மட்டும் அத்தகைய 97 சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.

அவ்விரு போக்குவரத்துக் கட்டணத் தளங்கள் தொடர்பில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரங்கள், பதிவுகளை நம்பி பலர் ஏமாறினர்.

$3 கட்டணத்திற்கு வரம்பின்றிப் பயணம் செய்யலாம் என்று அவை வலைவீசின.

அந்த விளம்பரங்கள் அல்லது பதிவில் இடம்பெற்றிருந்த இணைப்புகளைச் சொடுக்கியபோது, அவை ஈஸிலிங்க் அல்லது சிம்ப்ளிகோ சின்னங்கள் அடங்கிய போலி இணையத்தளங்களுக்கு இட்டுச் சென்றன.

அந்த இணையத்தளங்கள் வழியாக ஈஸிலிங்க் அட்டைகளை வாங்க, கடனட்டை அல்லது பற்றட்டை விவரங்களையும் ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல்லையும் அவர்கள் வழங்க வேண்டியிருந்தது.

‘இலவச ஈஸிலிங்க்’ அட்டை அடங்கிய ‘பரிசுப்பெட்டி’யைப் பெற்ற பிறகு, $3 விலையில் வரம்பின்றிப் பயணம் செய்வதற்கான சலுகையைப் பெறுவதற்காக கடனட்டை அல்லது பற்றட்டை விவரங்களைப் பதிவுசெய்யும்படி அவ்விணையத்தளங்கள் கேட்டன.

தங்களுக்குத் தெரியாமல் தங்கள் வங்கிக் கணக்குகள் வழியாகப் பணப் பரிமாற்றம் இடம்பெற்ற பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தனர்.

இப்படி ஆசை காட்டி மோசம் செய்யும் பதிவுகள், விளம்பரங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்