அரசாங்க அதிகாரி போல் பாசாங்கு செய்து $16.3 மில்லியன் பறித்த மோசடிக்காரர்கள்

1 mins read
f87abe01-bac6-4189-888a-9396eb33b3e9
ஜனவரி 2024 முதல் குறைந்தது 126 பேர் மோசடிவழி $16.3 மில்லியனை இழந்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்க அதிகாரி போல் ஆள் மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடம் ஆண்டு தொடங்கியது முதல் குறைந்தது 126 பேர் ஒட்டுமொத்தமாக $16.3 மில்லியனை இழந்துள்ளதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளாக பாசாங்கு செய்யும் மோசடிச் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளதாக ஜூன் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் குறிவைத்தவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக இந்த மோசடி நபர்கள் தொலைபேசிவழி தொடர்புகொண்டு குற்றம் சாட்டுவர். இவர்கள் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியாகவோ வங்கி அதிகாரியாகவோ மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்வர்.

குற்றவியல் நடவடிக்கைகளுக்குத் துணையாக இருந்த கடன் அட்டைகள், வங்கிக் கணக்குகள், தொடர்பு எண்கள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்ததாக மோசடிப் பேர்வழிகள் குற்றம் சுமத்துவர்.

பின்னர், இன்னொரு மோசடிக்காரருடன் தொலைபேசி தொடர்பு இணைக்கப்படும். எவ்வாறு குற்றமற்றவர் என நிரூபிக்கலாம் என்பது குறித்து தான் உதவ இருப்பதாக அந்த மோசடி நபர் கூறுவார்.

அதன் பிறகு, பிணையில் விடுவிப்பதற்கு அல்லது விசாரணை நடத்துவதற்குத் தேவையான பணத்தை, கூறப்படும் வங்கிக் கணக்குக்கு மாற்ற வேண்டும் என மோசடிக்காரர்கள் கூறுவர்.

நேரடியாகச் சந்தித்துப் பணத்தைத் தருவதற்கு மோசடிக்காரர்கள் ஏற்பாடு செய்த சம்பவங்களும் உண்டு.

இத்தகைய குற்றங்கள் தொடர்பான தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்