உட்லண்ட்ஸ் டிரைவ் 16ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 573ல் 18 வயது பெண்ணைக் கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் 17 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அதிகாலை நடந்ததாகக் கருதப்படுகிறது. அச்சம்பவத்துக்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்ற தாங்கள் அறிவதாக ஷின் மின் ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்தேகப் பேர்வழி சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படும் புளோக்கிற்கு ஷின் மின் செய்தியாளர்கள் சென்றபோது அங்குள்ள குடியிருப்பாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாக்கில் அங்கு ஒரு காவல்துறை வாகனத்தைப் பார்த்ததாகச் சொன்னார். என்ன நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தக் காட்சியை வழிப்போக்கர் ஒருவரும் கேமராவில் பதிவு செய்தார். பதிவான படங்களை அவர் சியாவ்ஹோங்ஷு (Xiaohongshu) தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் 17 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்கு ஆளானதாக நம்பப்படும் 18 வயது பெண் நினைவுள்ள நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணை தொடர்கிறது.