தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,000 மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் 189 பேரிடம் விசாரணை

1 mins read
பாதிக்கப்பட்டோர் $6.65 மில்லியனுக்குமேல் இழந்தனர்
83719761-e6ba-4fe1-9322-708ba2987965
பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் விசாரிக்கப்படுவோரில் 138 பேர் ஆண்கள்; 51 பேர் பெண்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 1,000 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மொத்தம் 189 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

மோசடிகளில் பெரும்பாலானவை முதலீடு, மின்வர்த்தகம், வேலைவாய்ப்பு, நண்பர் அல்லது அரசாங்க அதிகாரிபோல் நடித்த ஆள்மாறாட்டம் தொடர்பானவை.

அவற்றில் பாதிக்கப்பட்டோர் $6.65 மில்லியனுக்குமேல் இழந்ததாகக் கூறப்பட்டது.

சந்தேகத்துக்குரியவர்களில் 138 பேர் ஆண்கள்; 51 பேர் பெண்கள். அவர்கள் 16 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

பணமோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, உரிமமின்றிக் கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவையும் காவல்துறையின் ஏழு நிலப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்கும் இடையே மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

பணமோசடி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $500,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கிய குற்றத்துக்கு $125,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கையோ தொலைபேசி இணைப்பையோ பயன்படுத்திக்கொள்ள யாராவது வேண்டுகோள் விடுத்தால் அதை நிராகரிக்கும்படிப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களுடன் அவை தொடர்புபடுத்தப்பட்டால் அவர்கள்தான் அவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்