மதுபான விற்பனை, மது அருந்துதல் தொடர்பான வெவ்வேறு விதிமீறல்களுக்காக லிட்டில் இந்தியாவின் 19 மதுபானக் கடைகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் மதுபானக் கடைகளில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மத்திய காவல்துறைப் பிரிவு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நோரிஸ் ரோடு, கஃப் ரோடு, கிளைவ் ஸ்திரீட், அப்பர் வெல்ட் ரோடு, டன்லப் ஸ்திரீட், சந்தர் ரோடு, கிர்பாவ் ரோடு, கேம்பல் லேன் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 19 சில்லறை வர்த்தகக் கடைகளும், மதுபானக் கட்டுப்பாட்டு (விநியோகம், பயன்பாடு) சட்டம் 2015 கீழ் குற்றம் புரிந்ததற்காக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு கடையில் மதுபானம் அருந்துவதற்காகத் தற்காலிக இடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு செய்வது அனுமதிக்கப்படா.
எஞ்சிய கடைகள் முறையான மதுபான விற்பனை உரிமமின்றி மதுபான விநியோகத்தில் ஈடுபட்டதாகவும், அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி மதுபானத்தை விற்றதாகவும் கூறப்படுகிறது.
மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரமாக லிட்டில் இந்தியா உள்ள நிலையில், சில்லறை வர்த்தக மதுபான உரிமம் உள்ளவர் இப்பகுதியில் மதுபானம் விற்க ஒரு குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை ஏழு மணி முதல் இரவு 10.30 மணி வரை மதுபான விற்பனை நடக்கலாம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறைக்கு முதல் நாள், பொது விடுமுறை ஆகிய நாள்களில் காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை மதுபானம் விற்கப்படலாம்.
செல்லுபடியாகும் மதுபான விற்பனை உரிமமின்றி மதுபானம் விநியோகிக்கும் நபர்களுக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மறுபடியும் குற்றம் இழைத்தவராக இருந்தால் $20,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மதுபானக் கட்டுப்பாட்டு (விநியோகம், பயன்பாடு) சட்டம் 2015 கீழ், மதுபான உரிமம் உள்ளவர் ஒரு மதுபானக் கட்டுப்பாட்டு வட்டாரத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபார நேரத்தை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.