இந்த ஆண்டு 19,600 ‘பிடிஓ’ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்

2 mins read
499ad790-81cb-49bb-ac7f-f2f39cd35f57
பார்க்எட்ஜ்@பிடாடாரி பகுதியை அமைச்சர் சீ ஹொங் டாட் பார்வையிட்டார். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

இந்த ஆண்டு ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் கிட்டத்தட்ட 19,600 வீடுகள் விற்பனைக்கு விடப்படவுள்ளன.

பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்களில் மூன்று கட்டங்களாக அந்த வீடுகள் விற்பனைக்கு வரும்.

புதிய வீடுகளுக்கான தேவை அதிகமாக இருந்தால் 2025 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 55,000 வீடுகள் எனும் இலக்கைக் கடந்தும் கூடுதல் வீடுகளை விற்பனைக்கு விடுமாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

“பிடிஓ வீடுகளின் விநியோகம் வலுவாக இருந்தால் மறுவிற்பனை வீடுகளின் விலைகளை மிதப்படுத்த முடியும்,” என்றார் அமைச்சர் சீ.

பிடிஓ வீடுகளின் விலை வருமான நிலைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று கூறிய அவர், வீட்டின் விலைக்கும் வருமானத்திற்கும் இடையிலான விகிதம், வீட்டுக் கடன் தவணை செலுத்தும் விகிதம் ஆகியவை வீடு வாங்குபவர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய வகையில் மலிவாக இருப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

வியாழக்கிழமை (ஜனவரி 8), பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் கட்டி முடிக்கப்பட வேண்டிய கடைசி நான்கு திட்டங்களில் ஒன்றான பார்க்எட்ஜ்@பிடாடாரி பகுதியைப் பார்வையிட்ட அமைச்சர் சீ, செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த ஆண்டு விற்பனைக்கு விடப்படும் வீடுகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்புக் காலத்தைக் கொண்டவையாக இருக்கும். அடுத்த ஆண்டும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்புக் காலத்தைக் கொண்ட 4,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று அவர் கூறினார்.

சென்ற ஆண்டு மறுவிற்பனை வீடுகளின் விலை உயர்வு சீரடைந்து, நான்காவது காலாண்டில் விலையில் மாற்றமில்லாமல் நிலையாக இருந்ததாகவும் திரு சீ குறிப்பிட்டார்.

அதிக எண்ணிக்கையிலான வீடுகள் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை நெருங்குவதால் அந்த வீடுகள் மறுவிற்பனை வீடுகளாக விற்கப்படலாம் என்றும் அது மறுவிற்பனை வீட்டு விலையை மிதமாக்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த ஆண்டு அங் மோ கியோ, புக்கிட் மேரா, செம்பவாங், தோ பாயோ, தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய இடங்களில் புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அந்த வீடுகள் பிரைம், ஸ்டாண்டர்ட், பிளஸ் பிரிவுகளின்கீழ் அமைந்திருக்கும்.

சென்ற ஆண்டு வீவக, 28 வீட்டுத் திட்டங்களின்கீழ் ஏறத்தாழ 19,600 வீடுகளைக் கட்டி முடித்தது. அவற்றுக்கான சராசரி காத்திருப்புக் காலம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள்.

தனியார் வீடுகளைப் பற்றிப் பேசிய அமைச்சர் சீ, இந்த ஆண்டு 12,000 தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்றார்.

தேவை அதிகமாக இருந்தால் அரசாங்க நில விற்பனை மூலம் அதிக நிலம் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்