தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவுக்காக ரமலான் காலத்தில் $1 மி. திரட்டப்பட்டது: மசகோஸ்

2 mins read
b3b859e7-afca-4372-9243-ab3872fdf910
நோன்புப் பெருநாள் உரையாற்றும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃபி. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

காஸாவில் மனிதாபிமான உதவி மேற்கொள்வதற்கு நிதி திரட்டும் இயக்கம் நடந்துவருகிறது.

அதில் இதுவரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளித் தொகை திரட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃபி தெரிவித்துள்ளார். மலாய் / இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட சிங்கப்பூரர்கள் பலர் ரமலான் மாதம் முழுவதும் நன்கொடை அளித்துவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் நன்கொடை அமைப்பான ரஹ்மாத்தான் லில் அலாமின் அறநிறுவனம் (RLAF) நடத்திய நிதி திரட்டு இயக்கத்தில் நன்கொடை அளித்தோருக்கு திரு மசகோஸ், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) ஆற்றிய நோன்புப் பெருநாள் உரையில் நன்றி தெரிவித்துக்கொண்டார். திரட்டப்படும் நன்கொடை, காஸா மக்களுக்கு உணவு, மருத்துவப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்க உதவும்.

‘காஸாவுக்கு உதவி’ (Aid for Gaza) எனும் ரஹ்மாத்தான் லில் அலாமின் அறநிறுவனத்தின் இயக்கம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம்தேதி தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வரை தொடரும்.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ், தென் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல், காஸா மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், இதுவரை 19 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை காஸாவுக்கு வழங்கியிருக்கிறது.

திரு மசகோசின் நோன்புப் பெருநாள் உரை, சிங்கப்பூரின் மலாய் மொழித் தொலைக்காட்சி ஒளிவழியான சூரியாவில் ஒளிபரப்பானது. சூரியாவில் தினமும் ஒளிபரப்பாகும் இரவு எட்டு மணிச் செய்தியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அமைச்சர் மசகோஸ் மலாய் மொழியில் ஆற்றிய உரை இடம்பெற்றது.

பள்ளிவாசல்கள், சமூகக் கட்டமைப்புகள்வழி நடப்பில் இருக்கும் பல்வேறு நன்கொடை திட்டங்களின் மூலம் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவளிப்பதில் மலாய் / இஸ்லாமிய சமூகத்தினருக்கிடையே இருக்கும் வலுவான ஒற்றுமையை திரு மசகோஸ் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்