ஏறக்குறைய 1.4 மில்லியன் பவுண்ட் (S$2.4 மில்லியன்) மதிப்பிலான பணப் பரிமாற்றச் சேவைகளை உரிமமின்றி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அந்த மொத்தத் தொகையில், மோசடிகள் மூலம் பெறப்பட்ட குறைந்தது 75,050 பவுண்டும் அடங்கும்.
இந்நிலையில், மாவட்ட நீதிமன்றம் ஜூன் 25ஆம் தேதி, 34 வயது ஷோன் கோ சாவ் லுன் என்ற அந்த ஆடவரைக் குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவித்தது.
அத்தகைய விடுவிப்பைப் பெற்றவர்கள்மீது, அதே குற்றத்திற்காக மீண்டும் குற்றஞ்சாட்ட முடியாது.
“இந்த வழக்கின் உண்மை விவரங்களையும் சூழ்நிலைகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, கோவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த விடுவிப்புக்கு அரசுத் தரப்பு விண்ணப்பித்தது,” என்று கூடுதல் விவரங்களை வெளியிடாமல், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
அந்தச் சிங்கப்பூரர்மீது கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பரில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட காலகட்டத்தில், அவர் ‘டே பிராண்ட்’ (Day Brand) என்ற உள்ளூர் நிறுவனத்தின் ஒரே இயக்குநராக இருந்தார். அந்த நிறுவனம் தற்போது மூடப்பட்டுள்ளது.
‘டே பிராண்ட்’ நிறுவனத்தின் மூலம், வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக, ‘வைஸ் ஏசியா பசிபிக்’ (Wise Asia Pacific) என்ற பணப் பரிமாற்ற நிறுவனத்தில் கோ கணக்கு ஒன்றைத் திறந்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் பெரும்பாலும் ‘யுஎஸ்டிடி’ (USDT) எனப்படும் மின்பணத்தை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே 10க்கும் ஜூன் 17க்கும் இடைப்பட்ட காலத்தில், அவரது ‘வைஸ்’ (Wise) கணக்கிற்கு, வெளிநாட்டு ‘வைஸ்’ கணக்குகளிலிருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பவுண்ட் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
“கோ அதன் பிறகு அந்தப் பணத்தைத் தனது தனிப்பட்ட வங்கித் கணக்கிற்கு மாற்றுவார்; பின்னர், மற்ற மின்பண விற்பனையாளர்களிடமிருந்து ‘யுஎஸ்டிடி’ நாணயங்களை வாங்குவதற்கான கட்டணமாக, அந்த நிதியை மற்ற உள்ளூர் வங்கித் கணக்குகளுக்கு மாற்றுவார்,” என்று காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கோ, அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

