சிங்கப்பூரில் $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் லண்டனில் $69.8 மில்லியன் பெறுமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். இங்கு அதிகாரிகள் அவர்களைத் தேடியபோது தப்பியோடிய அவர்கள், இங்கிலாந்தில் சொத்துகளை வாங்கியுள்ளனர்.
‘திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழல் பற்றித் தெரிவிக்கும் திட்டம்’ (ஓசிசிஆர்பி)எனும் பெயர்கொண்ட புலனாய்வுத் தகவல்களைத் தெரிவிக்கும் குழுவுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் பணியாற்றி வருகிறது. பிரிட்டனில் செயல்படும் நிறுவனங்களின் மூலம் 2023ஆம் ஆண்டு ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையில் சொத்துகளை வாங்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தெரியவந்தது.
சிங்கப்பூரில் அதிரடிச் சோதனையிலிருந்து தப்பிய ஒரே வாரத்தில் சந்தேக நபர்களில் ஒருவரான சு பிங்காய், லண்டனில் $27 மில்லியன் மதிப்புள்ள ஒன்பது அடுக்குமாடி வீடுகளை வாங்கினார். 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி அவர் பிராட்வே குடியிருப்பில் ஒன்பது வீடுகளை வாங்கியதற்கான சொத்துப் பத்திரங்களையும் அதிகாரத்துவ ஆவணங்களையும் எஸ்டியும் ஓசிசிஆர்பி குழுவும் கண்டன. அந்தக் குடியிருப்புப் பகுதி, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பத்து நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது.
சீனாவில் பிறந்தவரான அவர், கம்போடியக் குடியுரிமை பெற்றவர். தென் பசிபிக் பெருங்கடற்பகுதியில் இருக்கும் வனுவாட்டுத் தீவு, கரீபியனில் உள்ள செயின்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவற்றின் கடப்பிதழ்களையும் அவர் வைத்திருக்கிறார். 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையின்போது தப்பியோடிய 17 பேரில் அவரும் ஒருவர்.
அன்றைய தினம், 10 வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, தண்டனைகளும் விதிக்கப்பட்டன. அவர்கள் சிங்கப்பூருக்குள் மீண்டும் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

