பேருந்து ஒன்றின் மீது ஒரு லாரி ஜூன் 8 காலை நேரத்தில் மோதியதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் தெம்பனிஸ் ரோட்டுக்கு வெளியேறும் சாலைப்பகுதியில் நடந்தது.
விபத்து குறித்து தங்களுக்குக் காலை 6.35 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாலை ஓரத்தில் ‘டவர் டிரான்சிட்’ பேருந்து ஒன்று நின்றிருப்பதையும் சாலையின் முதல் தடத்தில் லாரி ஒன்று இருப்பதையும் காட்டும் காணொளி ஒன்று ‘சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடன்ட்ஸ்.காம்’ எனும் ஃபேஸ்புக் குழுவின் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
லாரியின் முன்பகுதி மிக மோசமாகச் சேதமடைந்திருந்ததைக் காண முடிந்தது.
இதற்கிடையே, 58 வயது ஆண் பேருந்து ஓட்டுநரும் 42 வயது ஆண் லாரி ஓட்டுநரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

