விளையாட்டுத் திடலில் தீ; இருவரிடம் விசாரணை

1 mins read
356b3bd3-7a61-4b79-89d7-507cdd68a80f
பொங்கோல் வாக் வீவக புளோக் 308 மாடியிலுள்ள சிறுவர் விளையாட்டுத் திடலில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

பொங்கோலில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து பதின்ம வயது ஆடவர்கள் இருவர் காவல்துறை விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு 9.40 மணியளவில் பொங்கோல் வாக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் 308ல் தீ மூண்டதாகத் தங்களுக்குத் தகவல் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

கட்டடத்தின் 14வது தளத்தில் உள்ள திறந்தவெளி சிறுவர் விளையாட்டு மைதானத்தில் தீ மூண்டது என்று சீன ஊடகமான சாவ்பாவ் தெரிவித்தது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆபத்து விளைவிக்கும் வகையில் தீ மூள வைத்ததன் தொடர்பில் சம்பந்தப்பட்ட பதின்ம வயது ஆடவர்கள் இருவரும் விசாரணையில் உதவி வருவதாக காவல்துறை சொன்னது.

தீ மூண்ட சிறுவர் விளையாட்டு மைதானத்துக்கு எதிரே வசிக்கும் ஒருவர், அங்கிருந்து சத்தம் கேட்டதாகவும் அங்கிருந்த செடித் தொட்டியில் தீ எரிந்ததாகவும் சாவ்பாவிடம் கூறினார்.

இரவு வேளைகளில் பலர் அந்த சிறுவர் விளையாட்டு மைதானத்தில் புகைப்பிடிக்கப் போவதாக வேறொரு குடியிருப்பாளர் சொன்னார்.

அதனால் அப்பகுதியில் தீ மூண்டு அது தங்கள் வீடுகளுக்குப் பரவும் அபாயம் குடியிருப்பாளர்களிடையே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் நகர மன்றத்திடம் தெரியப்படுத்தினர்.

சம்பவத்தைத் தொடர்ந்து தீ மூண்ட சிறுவர் விளையாட்டு மைதானத்தில் புகைப்பிடிக்கக்கூடாது என்று குறிப்பை நகர மன்றம் எழுப்பியுள்ளது.

எனினும், நிலைமையில் மாற்றம் இல்லை என்றும் நகர மன்றம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்