சீனாவைச் சேர்ந்த பயணி ஒருவர் 200க்கும் அதிகமான பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்தி வர முயன்றிருக்கிறார்.
அவரின் முயற்சி சாங்கி விமான நிலையத்தில் முறியடிக்கப்பட்டது.
இச்சம்பவம் இம்மாதம் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் நிகழ்ந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 23) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. சீனாவைச் சேர்ந்த 57 வயது ஆடவர் ஒருவர் சந்தேகம் தரும் வகையில் நடந்துகொண்டதைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அந்த ஆடவரைக் கூடுதல் சோதனைகளுக்கு அனுப்பினர்.
விசாரணையில் தன்னிடம் 10 பெட்டி சிகரெட்டுகள் இருப்பதாகக் கூறிய அவரிடம் மொத்தம் 218 பெட்டி சிகரெட்டுகள் இருந்தன. அவை மூன்று பைகளில் வைக்கப்பட்டிருந்தாக ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்தது.
மேல்விசாரணைக்காக இந்த விவகாரம் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வரி செலுத்தப்படாத பொருள்களை வைத்திருப்பது, கையாள்வது, விற்பது, வாங்குவது, விநியோகிப்பது ஆகியவை பொருள், சேவை வரிச் சட்டம் மற்றும் சுங்கத்துறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் மோசமான குற்றங்களாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு, செலுத்தவேண்டிய வரித் தொகையில் 40 மடங்கு வரையிலான அபராதம் விதிக்கப்படலாம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

