200,000 பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்பு

200,000 பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்பு

2 mins read
48be3a6a-b7df-4e0d-aa98-b0d4ff6da889
நான்கு ஆண்டுகளில் 200,000க்கும் மேற்பட்டோர் புதிதாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரக சுத்திகரிப்புக்கான தேவையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நான்கே ஆண்டுகளில் 200,000க்கும் மேற்பட்டோர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு வெளியே செயல்படும் 1,000க்கும் மேற்பட்ட ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ மருந்தகங்கள் இத்தகைய நோயாளிகளைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சு கொண்டு வந்துள்ளது. சிறுநீரக நோய் மேலும் மோசமாகி நாட்டின் சிறுநீரகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான தேவை அதிகரிப்பதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

பதினெட்டு முதல் 74 வயது வரையிலான சிங்கப்பூர்வாசிகளிடையே 2023க்கும் 2024க்கும் இடையே நாட்பட்ட சிறுநீரக நோய் 13.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இது, 2019 முதல் 2020 வரை இருந்த 8.7 விழுக்காட்டைவிட ஏறக்குறைய 60 விழுக்காடு உயர்வாகும் என்று அக்டோபர் 2025ல் சுகாதார அமைச்சு வெளியிட்ட மக்கள்தொகை சுகாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இது குறித்துப் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நிலையாக இருந்தாலும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரகச் சுத்திகரிப்பு தேவைப்படுவோரின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறியிருந்தார்.

அதிகமான சிங்கப்பூரர்கள் வயதானவர்களாக இருப்பதால் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு அவர்கள் எளிதில் ஆளாவதாக அவர் தெரிவித்தார்.

நாட்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்டகாலம் பாதிக்கும் வகையில் சிறுநீரகத்துக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இது, சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் படிப்படியாகக் குறைவதைக் காட்டுகிறது.

பொதுவாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஆபத்தான காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

சிறுநீரக நோய்க்கு ஐந்து கட்டங்கள் இருப்பதாக தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் மருத்துவ இயக்குநரான மருத்துவர் ஜேசன் சூ கூறுகிறார்.

முதல் கட்டத்தில் சிறுநீரகத்தில் சில குறைபாடுகள் இருப்பது தெரிய வரும். அந்தக் கட்டத்தில் சிறுநீரில் புரதம் அதிகம் இருப்பதைக் காட்டினாலும் சிறுநீரகம் தொடர்ந்து செயல்படும் நிலையில் இருக்கும்.

ஐந்தாவது கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையை எட்டுகிறது. அப்போது சிறுநீரகச் சுத்திகரிப்பு அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்