2026ல் தென்கிழக்காசிய மின்னிலக்கப் பொருளியல் $470 பில்லியனை எட்டும்

2026ல் தென்கிழக்காசிய மின்னிலக்கப் பொருளியல் $470 பில்லியனை எட்டும்

வரைகலை: ஹஃபிஸா ஐனி

21 Oct 2026 - 8:41 pm

2 mins read

புவிசார் அரசியல் பதற்றம், பொருளியல் சவால்கள் ஆகியவற்றிற்கு இடையே தென்கிழக்காசியாவின் மின்னிலக்கப் பொருளியல் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் $470 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகல், சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான ‘தெமாசெக்’, ஆலோசனைச் சேவை நிறுவனமான ‘பெயின் அண்ட் கம்பெனி’ ஆகியவை புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவலைக் குறிப்பிட்டன.

2025ஆம் ஆண்டில் $402 பில்லியனாக இருந்த மின்னிலக்கப் பொருளியல் இவ்வாண்டு 17 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதற்குச் செயற்கை நுண்ணறிவின் அபார வளர்ச்சியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் இருக்கும் புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய பத்து நாடுகளின் மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சியை அந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

மின்னணு வர்த்தகம், இணையவழிப் பயணம், இணைய ஊடகம், போக்குவரத்து, உணவு விநியோகம் ஆகியவற்றில் வலுவான வளர்ச்சி காணப்பட்டதாக அது கூறியது.

மின்னணு வர்த்தகப் தளங்களில் விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் பல செயற்கை நுண்ணறவுக் கருவிகள் கிடைப்பதாக பெயின் நிறுவனப் பங்காளியான புளோரியன் ஹோப் தெரிவித்தார்.

வட்டாரப் பயனீட்டாளர்களில் 69 விழுக்காட்டினர் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.

இணையவழிப் பயணத்தின் மொத்த வர்த்தக மதிப்பு 2026ஆம் ஆண்டில் $75.39 பில்லியனை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு இணைய ஊடகம் $56.22 பில்லியனையும் போக்குவரத்து, உணவு விநியோகம் 51.112 பில்லியனையும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலகப் பண நிதியத்தின் அக்டோபர் மாதப் பொருளியல் முன்னுரைப்பின்படி, ஆசியானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4.9 விழுக்காடாகவும் 2027ஆம் ஆண்டில் 4.7 விழுக்காடாகவும் இருக்கும். இது உலகளாவிய வளர்ச்சியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்