சிங்கப்பூரில் பணியாற்றும் பல பொதுப் பேருந்து ஓட்டுநர்களைப் போல திரு ஜெரியஸ் இல்லை.
தமது 22 வயதில் பேருந்து ஓட்டும் இளைஞரான அவர், எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணியாற்றுவோரில் ஆகக் குறைந்த வயதான ஊழியர் ஆவார் என்பது ஒரு தனிச்சிறப்பு.
பேருந்து ஓட்டுநராகப் பணியாற்ற வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தபோதிலும், அவருக்குச் சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்ட செய்தியை தமது 21வது பிறந்தநாளில் தெரிந்துகொண்டது வாழ்வில் மிகவும் கவலையளித்த ஒன்றாக அவர் குறிப்பிட்டார்.
சிறுநீரக செயலிழப்பு நோயின் இறுதிக் கட்டத்தை எட்டிய சோகத்துடன் வாழ்வில் ஏற்பட்ட வேதனையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை அவர் அடைந்தார். மருத்துவர்கள் தவறான முடிவெடுத்துவிட்டதாகவும் கூட அவருக்கு எண்ணம் ஏற்பட்டது.
அத்தனை சோகத்திலும் தமது கனவை அவர் கைவிடவில்லை. எஸ்எம்ஆர்டி நிறுவனம் அவருக்குப் பேருந்து ஓட்டுநர் பதவியை 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கியது.
வாரத்தில் அடிக்கடி ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய காரணத்தால், அவருக்கு நீக்குப்போக்கான வேலை நேரத்தை நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுத்தது. அதன்படி சிகிச்சைகளுக்கு இடையே அவருக்குப் போதிய ஓய்வு கிடைக்க வழி அமைந்தது.
சிறுநீரக நன்கொடையாளர்
சிறுநீரக நன்கொடையாளரைத் தாம் தேடி வருவதாக மார்ச் மாதம் டிக்டாக் சமூக ஊடகத்தில் ஜெரியஸ் பதிவிட்டார். அதன்வழியாக மாற்று சிறுநீரகத்தைப் பெற்று தாம் விரும்பியவற்றைச் செய்து வாழலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
“எத்தனையோ நிறுவனங்கள் ஒரு வேலை வாய்ப்புக்கான எனது விண்ணப்பத்தை நிராகரித்த நிலையில், என்னிடம் பரிவுகாட்டி எஸ்எம்ஆர்டி நிறுவனம் பணியமர்த்தியது,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“எனது ஓட்டுநர் பணி எனக்கு உற்சாகத்தையும் மிகுந்த மனநிறைவையும் அளிக்கிறது.பொதுமக்களைச் சந்தித்து அவர்கள் செல்லவிரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது என்னை மகிழ்வுறச் செய்கிறது,” என்றார் ஜெரியஸ்.

