அரசாங்க அதிகாரிகளைப் போன்று ஆள் மாறாட்டம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்கள் இருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. $236,000க்கும் மேல் மோசடி செய்ததாக அவர்கள்மீது வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) குற்றஞ்சாட்டப்பட்டது.
20 வயது பூ-கோ காங் ஸின்னும் 22 வயது ஆங் யு ஷானும் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.
மலேசியரான ஆங், இன்னொருவருடன் சேர்ந்து சென்ற மாதம் (ஜனவரி) 26ஆம் தேதிக்கும் இம்மாதம் நான்காம் தேதிக்கும் இடையில் $99,000க்கும் மேற்பட்ட ரொக்கத்தையும் நகைகளையும் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
வங்கியிலிருந்து ஒருவர் அழைத்ததாக மூதாட்டி ஒருவர் புகார் கூறியிருந்ததாகக் காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
வங்கியிலிருந்து கடன்பற்று அட்டைக்கு விண்ணப்பிக்க அவரின் சிங்பாஸ் தவறாய்ப் பயன்படுத்தப்பட்டதாக அழைத்தவர் கூறினார். முறையற்ற பரிமாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அத்தகைய அட்டை தம்மிடம் இல்லை என்று மூதாட்டி தெரிவித்தார். சிங்கப்பூர் உள்துறை அமைச்சைச் சேர்ந்த அதிகாரி என்று சொல்லப்பட்ட ஒருவருக்கு அழைப்பு மாற்றிவிடப்பட்டது.
“$2.5 மில்லியன் பண மோசடியின் தொடர்பில் பெண் விசாரிக்கப்படுவதாக அவரிடம் கூறப்பட்டது. கையிலிருக்கும் ரொக்கம், கடிகாரங்கள், நகைகள் அனைத்தையும் ‘புலானய்வு அதிகாரியிடம்’ ஒப்படைக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. நகைகளின் மதிப்பு $90,000க்கும் அதிகம்,” என்று காவல்துறைப் பேச்சாளர் சொன்னார்.
அந்தப் பெண், பொருள்களைப் பையில் வைத்து அதனை பீஷான் ஸ்திரீட் 12ல் ஆங்கிடம் கொடுத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் வங்கியிலிருந்து சேமிப்பை எடுத்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடும்படி அழைத்தவர் பெண்ணிடம் கூறினார்.
பெண்ணின் மகன் சரியான நேரத்தில் தலையிட்டுப் பணப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார்.
புதன்கிழமை, இன்னொரு பெண்ணிடமிருந்து அதே போன்றதொரு புகாரைக் காவல்துறை பெற்றது.
இரண்டாவது பெண், கிட்டத்தட்ட $63,000 பெறுமான நகைகளையும் பொருள்களையும் பையில் வைத்து அதனை ஆங்கிடம் சிலேத்தாரில் கொடுத்ததாகக் காவல்துறை கூறியது. அவரிடமும் பணத்தை மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடும்படி அழைத்தவர் கோரியிருந்தார். சந்தேகம் ஏற்பட்டதால் பெண் அதனைச் செய்யாமல் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இன்னொரு சம்பவத்தில், சிங்கப்பூரரான பூ-கோ, 32 வயது முகம்மது ஃபட்லி ஃபர்ஹான் சுஹாய்டியுடனும் மற்றச் சிலரோடும் சேர்ந்து சென்ற ஆண்டு (2025) அக்டோபர் மாதத்திற்கும் இவ்வாண்டு ஜனவரிக்கும் இடையில் பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
மலேசியரான ஃபட்லியிடம் $137,000க்கும் மேல் பெறுமானமுள்ள ரொக்கத்தையும் நகைகளையும் பெற்று வருமாறு பூ-கோ உத்தரவிட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்தது. ஃபட்லியின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
புதன்கிழமை சிங்கப்பூரிலிருந்து வெளியேற முற்பட்ட ஆங்கும் பூ-கோவும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு இம்மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

