ஊதியம் இன்றி தவிக்கும் 240 வெளிநாட்டு ஊழியர்கள்: என்டியுசி, அமைச்சு உதவி

ஊதியம் இன்றி தவிக்கும் 240 வெளிநாட்டு ஊழியர்கள்: என்டியுசி, அமைச்சு உதவி

படம்:என்டியுசி

24 Oct 2026 - 10:16 am

2 mins read

சிங்கப்பூரின் இரண்டு நிறுவனங்களில் பணியாற்றிய ஏறத்தாழ 240 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) துணைத் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தார்.

மனிதவள அமைச்சுடன் இதுகுறித்து தொடர்பில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடம், மாற்று வேலைகளுக்கான ஏற்பாடுகள் போன்றவற்றைச் செய்துவருவதாகவும் அவர் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

வரவேண்டிய மாதச் சம்பளம், கூடுதல் நேர வேலைக்கான ஊதியம் ஆகியவையும் அதில் அடங்கும்.

அரசாங்க அதிகாரிகள், தேவைப்படும் உடனடி நிதி உதவிகளுடன் ஏறக்குறைய 90 ஊழியர்களுக்கு அன்றாட உணவையும் ஏற்பாடு செய்துள்ளதைத் தற்காப்புத் துணை அமைச்சருமாகிய திரு டெஸ்மண்ட் சூ குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர் நிலையமும் (MWC) மனிதவள அமைச்சின் பராமரிப்பு, தொடர்புப் பிரிவு அதிகாரிகளும் அந்த ஊழியர்களை கடந்த அக்டோபர் 19, 20ஆம் தேதிகளில் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளைக் கண்டறிந்தனர் என்பதையும் அவரது பதிவில் விளக்கினார்.

பங்ளாதேஷில் இருந்து சிங்கப்பூரின் கட்டுமானச் சேவைத் துறையில் வேலை பார்க்க வந்த அந்த ஊழியர்களில் சிலர் இங்கு வருவதற்கென $12,000 வரை செலுத்தியுள்ளனர். இதனை என்டியுசி மூத்த நிர்வாக அதிகாரி ஜெரமியா கூ, திரு டெஸ்மண்ட் சூ செய்த ஃபேஸ்புக் பதிவோடு இணைக்கப்பட்ட காணொளியில் பகிர்ந்தார்.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத விவகாரத்தை வெளிநாட்டு ஊழியர் நிலையம் அறிந்துள்ளது என்று என்டியுசி அமைப்பின் வெளிநாட்டு ஊழியர் பிரிவின் இயக்குநர் மைக்கல் லிம் ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

பிராசஸ் மெயின்டனன்ஸ் சொலியூஷன்ஸ், ஜூரோங் டெக்னிகல் & கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய சம்பந்தப்பட்ட அந்த இரு நிறுவனங்களின் பெயர்களையும் அவர் அறிக்கையில் வெளியிட்டார்.

வழங்கப்படாத சம்பளம் குறித்து சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் புகார்களைப் பதிவு செய்ய வெளிநாட்டு ஊழியர் நிலையம் அவர்களுக்கு உதவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்