செட்டியார் கோவில் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி 25ஆம் ஆண்டாக டேங்க் ரோட்டில் உள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நடந்தேறியது.
காலை 7 மணிக்குத் தொடங்கி ஐந்து கிலோமீட்டர் நடக்க அனைவரும் ஆயத்தமாக இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக அது உள்ளரங்க உடற்பயிற்சி நிகழ்வாக மாற்றப்பட்டது. பயிற்றுநர் திருவாட்டி விக்னேஸ்வரி வழிநடத்த, பங்கேற்ற ஏறத்தாழ 500 பேரும் பல்வேறு எளிய உடற்பயிற்சிகளைச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். “செட்டியார் கோவில் குழுமத்தினர் இறை பணிகளைத் தாண்டி சமூகப் பணிகளையும் மேற்கொள்வது பாராட்டத்தக்கது,” என்றார் அவர்.
“உடல்நலம் குறித்த சோதனைகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் தற்போது மருந்துச் சீட்டுகளுடன் சேர்த்து, குழுச் செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்யும் ‘சோஷியல் ப்ரிஸ்கிரிப்ஷன்’ எனும் சமூகப் பரிந்துரையையும் செய்கின்றனர். இதனால் உடலும் மனமும் ஒன்றிணைந்து மேம்படும். அப்படிப்பட்ட குழு நிகழ்வாக இது நடந்தேறியது சிறப்பானது,” என்றும் அவர் சொன்னார்.
உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்த செயல்பாடுகளில் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காகவும் இதனைத் தொடர்ந்து நடத்தி வருவதாகச் சொன்னார் செட்டியார் கோவில் குழுமத்தின் தலைவரான கார்பார் ராமசாமி, 64.
இதன் தொடர்பில் ஆறு பேருக்கு இயந்திரச் சக்கர நாற்காலி அளித்ததும் மகிழ்ச்சி என்றார் அவர்.
“ஒரு நிகழ்வு தொடர்ந்து 25 ஆண்டுகள் நடப்பது பெருமைக்குரியது,” என்று சொன்னார் செயலாளர் சௌந்தரராஜன், 55.
“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இன வேறுபாடின்றி சிரமத்திலிருக்கும் ஆறு மூத்தோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இதனைப் பெற்ற 87 வயதான தங்கவேலு முத்தையா பண்டிதர் கடந்த மூன்றாண்டுகளாகவே நடப்பதற்குச் சிரமமாக இருப்பதாகவும், பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக சக்கர நாற்காலி வாங்க இயலவில்லை என்றும் சொன்னார். “இதனைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி,” என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு மூத்தோரான பெருமாள் கருப்பையா, 97, நடந்தால் தமக்கு மூச்சு வாங்குவதாகச் சொன்னார். “இந்த சக்கர நாற்காலிதான் கொஞ்சம் வெளியிடங்களுக்குச் சென்றுவர மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்கேற்று வருபவர் சுவா சூ காங் பகுதியைச் சேர்ந்த கணக்கியல் துறை ஊழியர் ஆர்.எம் முத்தையா, 64. எங்கு உடல்நலம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றாலும் அதில் பங்கேற்கும் வழக்கம் உண்டு என்றும், குறிப்பாக இந்த நிகழ்வில் நண்பர்களுடன் இணைந்து பங்கேற்பது நல்ல அனுபவம் என்றும் அவர் சொன்னார். “எதிர்காலத்திலும் தொடர்ந்து பங்கேற்பேன்,” என்றார் அவர்.
இதில் முதன் முறையாகப் பங்கேற்கும் தொழில்நுட்பத் துறை ஊழியர் ருக்மிணி, “ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் தன்னைப் போன்றோருக்கு மிகவும் தேவையான நிகழ்ச்சி இது,” என்று சொன்னார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

