$3.8 பில்லியன் பணமோசடி வழக்கு: 11 ரோல்ஸ்-ராய்ஸ் உட்பட 47 கார்கள் மறைமுக ஏலத்தில் விற்பனை

$3.8 பில்லியன் பணமோசடி வழக்கு: 11 ரோல்ஸ்-ராய்ஸ் உட்பட 47 கார்கள் மறைமுக ஏலத்தில் விற்பனை

2 mins read
44bbd8bc-850b-4211-95f1-2397ba7c618a
தர்ட் அவென்யூவில் உள்ள சொகுசு பங்களா வீட்டிலிருந்து 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி (இடப்பக்க மேலிருந்து கடிகாரச் சுழற்சி முறை) சிவப்பு ரோல்ஸ்-ராய்ஸ் டான், சிவப்பு போர்‌ஷே 911 தார்கா, வெள்ளை டொயோட்டா அல்ஃபார்ட், கறுப்பு ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் முதலியவை கைப்பற்றப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் மிகப்பெரிய பணமோசடி வழக்கில் விசாரிக்கப்பட்ட வெளிநாட்டினருடன் தொடர்புடைய மொத்தம் 47 சொகுசு கார்கள் ஏலத்துக்கு வருகின்றன. எஸ்ஜிகார்மார்ட் கோட்ஸ் (Sgcarmart Quotz) இணையத்தளத்தின் மூலம் நடைபெறும் ஏலத்தை நிர்வகிக்க டெலோய்ட் (Deloitte) நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 11 ரோல்ஸ் ராய்ஸ், 2 பென்ட்லி, ஃபெராரி, மெக்லாரன் ஆகியவற்றுடன் 24 உயர்தர ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. இவை 2017ஆம் ஆண்டுக்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் செல்லுபடியாகும் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டண (சிஓஇ) உரிமங்களுடன் பதிவு செய்யப்பட்டவை.

சில கார்கள் மிகக் குறைந்த தொலைவே ஓட்டப்பட்டிருந்தாலும் நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தன. அதனால் அவற்றின் மின்கலன்களையும் டயர்களையும் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் குளிர்சாதனத்தைச் சீரமைக்க வேண்டியது உள்ளிட்ட பழுதுபார்ப்புப் பணிகள் தேவைப்படுகின்றன. மேலும் ‘888’ அல்லது ‘1’ போன்ற சிறப்புப் பதிவு எண்கள் கொண்ட கார்களும் இவற்றில் அடங்கும்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு, தண்டனைக்குப் பிறகு நாடு கடத்தப்பட்டனர்.

தலைமறைவான 17 சந்தேக நபர்களில் 15 பேர் கிட்டத்தட்ட $1.85 பில்லியன் மதிப்பிலான சொத்துகளை ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர். இக்குற்றப் பின்னணியுடன் தொடர்புடைய 207 சொத்துகள், 77 வாகனங்கள், $1.45 பில்லியனுக்கும் அதிகமான வங்கித் தொகை, $76 மில்லியனுக்கும் மேற்பட்ட ரொக்கம் முதலியவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளைப் பராமரிக்கவும் நிர்வகிக்கவும் 2023, 2024ஆம் நிதி ஆண்டுகளில் $2.65 மில்லியன் செலவானதாகக் காவல்துறையின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் செய்த விற்பனை

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி அரசாங்கம் 33 வாகனங்களை விற்றுப் பணமாக்கியது.

ஏலத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயும் அரசாங்கத்தின் திரட்டப்பட்ட நிதியில் சேர்க்கப்படும்.

குறிப்புச் சொற்கள்