வேலையில் சேர்ந்த நான்கு மாதங்களிலேயே தமது மேலாளரால் குறிவைக்கப்பட்டு, தாம் செய்யும் பணிகள் சார்ந்த நடைமுறைகளில் வழக்கத்தைவிட வேறுவிதமாக நடத்தப்படுவதை உணர்ந்தார் திருவாட்டி ஃபெலிஷியா, 39.
புதிதாக வேலையில் சேர்ந்த அவருக்கு ஆறுமாத காலம் தகுதிகாண்பருவம் என்பதால் தமது பணிகளை அவர் முடிந்தவரை திறமையாகச் செய்தார்.
வர்த்தக இடமாற்றம், அலுவலகங்களை வடிவமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடங்கிய தணிக்கை மேலாளராக அவர் இயங்கினார். தொடக்கத்தில் இருவரது உறவும் நட்புடன்தான் அமைந்தது. ஆயினும், நாளாக நாளாக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகளில் குறுகிய காலக்கெடுவுடன் குற்றங்குறை கண்டுபிடிப்பதோடு அவரை நிறுவன மேலாளர் நேரடியாக சந்திக்கவும் இல்லை.
அந்நிறுவனம் தம்மை விரைவில் பணிநீக்கம் செய்யலாம் என்ற எண்ணம் ஃபெலிஷியாவுக்கு எழுந்தது.
அத்துறையில் 12 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் நிறைந்த திருவாட்டி ஃபெலிஷியா ஆறுமாதங்கள் முடிந்ததும் அவரது பணியில் நிறைவு இல்லை என்று கூறி, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருவாட்டி ஃபெலிஷியா சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியிடம் (டிஏடிஎம்) வழக்கைப் பதிவு செய்தார். தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) உறுப்பினராக இருப்பது அதற்கு உதவியது.
விசாரணை முடிவில் ஃபெலிஷியாவுக்கு இழப்பீடாக மூன்று மாத ஊதியமான 30,000 வெள்ளியை நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. முத்தரப்புக் கூட்டணி 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இதுபோன்ற வழக்குகளில் முதன்முறையாகத் தீர்ப்பு விவரம் வெளிவந்துள்ளது.
வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ஆறுமாத காலம் தகுதிகாண்பருவம் முடிந்ததும் அந்தப் பெண் திடீர் எனவும் நியாயமற்ற வகையிலும் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று கூறினார். மேலும், அவரது பணிகள் நிறைவாக இல்லை என்பதை நிரூபிக்க நிறுவனம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
முத்தரப்புக் கூட்டணி வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில், ஊழியர் ஒருவர் நிறைவாகப் பணிசெய்யவில்லை என்ற காரணத்தால் பணிநீக்கம் செய்யப்படும்போது அவரைப் பணியமர்த்திய நிறுவனம் அதனை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைச் செய்யவில்லை என்றால் தவறான பணிநீக்கம் என்று வகைப்படுத்தப்படும்.
இவ்வாண்டில் நடந்த இதேபோன்ற 17 வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை வேலைக் கோரிக்கை நடுவர் மன்றம் (இசிடி) அண்மையில் வெளியிட்டுள்ளது.
ஃபெலிஷியாவின் வழக்கு அந்த மன்றத்துக்குச் செல்லவில்லை. ஏனெனில், நிறுவனத்துடன் வெற்றிகரமாக நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் அவர் மூன்று மாத ஊதியத்தைப் பெற ஒப்புக்கொண்டார்.
வேலையிடத்தில் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்படும் விவகாரங்களில், வேலை கோரிக்கை நடுவர் மன்றம் வெளியிட்டு வரும் வழிகாட்டுதல் தீர்ப்புகள் ஊழியர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வை அதிகரித்துள்ளன.
வேலையிட நியாயத்தன்மை சட்டம் (Workplace Fairness Act) 2027ஆம் ஆண்டில் நடப்புக்கு வருவதற்கு முன்பாக, இத்தகைய தீர்ப்புகள் ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சட்டத் தெளிவை வழங்குவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக சச்சரவுத் தீர்வு நிர்வாகத்திற்கான முத்தரப்புக் கூட்டணி கையாண்ட வழக்குகள் 2021ல் 3,031 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2025ல் 4,396 ஆக உயர்ந்தன. அவற்றில் 86 விழுக்காடு விவகாரங்கள் வெற்றிகரமாகத் தீர்த்து வைக்கப்பட்டன.
வேலை, பணியிடம் குறித்த ஆவணங்கள், மின்னஞ்சல்கள், எச்சரிக்கைக் கடிதங்களைப் பாதுகாத்து வைப்பதே உரிமைகளைப் பெற உதவும் எனச் சட்ட வல்லுநர்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
