தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்தது; மூவர் மருத்துவமனையில்

1 mins read
e4fbc4a4-f2fe-4830-a8d0-47343c52eb1e
புளோக் 706, கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.10 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்தச் சம்பவம் மார்ச் 19ஆம் தேதி கிளமெண்டியில் நடந்தது.

புளோக் 706, கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 2ல் ஏற்பட்ட அந்தத் தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.10 மணிவாக்கில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது.

சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும், நான்காம் தளத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்ததாகவும் அது தெரிவித்தது.

கிளமெண்டி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைக்க தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

குடிமைத் தற்காப்புப் படையினர் அவ்விடத்தைச் சென்றடைவதற்குள், வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

அந்த வீட்டைச் சேர்ந்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

அறையில் மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றிலிருந்து தீ மூண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணை காட்டியதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்