தென்மேற்கு வட்டாரக் குடியிருப்பாளர்களின், குறிப்பாகக் குறைந்த வருவாய் ஈட்டுவோரின் உணவு சார்ந்த நிதிச் சுமையை இலகுவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ‘வேல்யூ மீல்ஸ்’ எனும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
தென்மேற்கு வட்டாரத்தில் வசிக்கும் எளிய, தேவையுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தரமான உணவுகளைக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் வழங்குவது இத்திட்டத்தின் இலக்கு.
தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் ‘செலெக்ட்’ குழுமமும் கைகோத்துச் செயல்படுத்தும் இத்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) காலை துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தொடங்கி வைத்தார்.
சுவா சூ காங் வட்டாரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திரு கான், “‘வேல்யூ மீல்ஸ்@சவுத் வெஸ்ட்’ எனும் இத்திட்டம் அரசாங்கமும் தனியார்த் துறையும் சமூகமும் எவ்வாறு ஒன்றிணைந்து அக்கறையுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு,” என்றார்.
இத்திட்டத்தின்படி தென்மேற்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள் எளிதாக உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக வீவக பொது வெற்றிடங்கள் உள்ளிட்ட தெரிவுசெய்யப்படும் இடங்களில் அடுத்த இரு மாதங்களில் 80 தானியங்கி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.
அந்த இயந்திரங்களில் உள்ள உணவுகளை $3 அல்லது அதற்கும் குறைந்த விலையில் குடியிருப்பாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
கூடுதலாக, செலக்ட் குழுமம் அவ்வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு இந்த உணவுகளை வாங்க உதவிடும் வகையில் ஏறக்குறைய $600,000 மதிப்புள்ள சிறப்புத்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தானியங்கி உணவு விற்பனை இயந்திரங்களிலிருந்து ஹலால், சைவம் உட்பட உண்ணத் தயாராக இருக்கும் சோறு, நூடல்ஸ், வறுத்தசோறு, சூஷி, சேண்விட்ச் போன்ற பற்பல உணவுகளை தங்களின் தேவைக்கேற்ப வட்டாரவாசிகள் தேர்வு செய்யலாம். இதன்வழி ஏறத்தாழ ஆயிரம் முதல் மூவாயிரம் குடியிருப்பாளர்கள்வரை பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து கருத்துரைத்த தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங், இம்முயற்சியின் மூலம் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைச் செலவு சார்ந்த சுமையைக் குறைக்க மலிவு விலையில் உணவுகளை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
“கட்டுப்படியாகக்கூடிய விலையில் உணவுகள் கிடைப்பதற்கு முன்னுரிமை அளித்திடும் வேளையில், தரமான ஊட்டசத்துமிக்க உணவுகளை அளிக்கும் நோக்கத்தில் சமரசம் செய்யப்படாது என்று உறுதியளிக்கிறோம்,” என்றார் திருவாட்டி லோ.
குடியிருப்பாளர்கள் வரவேற்பு
தங்கள் வட்டாரத்திற்கு வந்துள்ள இத்திட்டத்தின் வரவால் தங்களுக்குக் குறிப்பிடத்தகுந்த உதவி கிட்டியுள்ளதாகத் தென்மேற்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 34 ஆண்டுகளாக அவ்வட்டாரத்தில் வாழ்ந்து வரும் திருவாட்டி லீலா, 55, விலைவாசி உயர்ந்து வரும் இக்காலத்தில் இம்முயற்சி வரவேற்கப்படதக்கது என்றார்.
“எங்கள் குடும்பத்தில் ஐவர் இருந்தாலும் வேலைக்குச் செல்வது ஒருவர் மட்டுமே. உடல்நலம் குன்றியுள்ள கணவரை முழுநேரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வகையில் குடும்பத்தின் மாதாந்தர உணவுப் பொருள் சார்ந்த செலவுகளில் இத்திட்டம் கணிசமான ஆதரவை அளிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் திருவாட்டி லீலா .
இந்தத் திட்டம் தங்களின் உணவு செலவுகளைக் கிட்டத்தட்ட நாற்பது விழுக்காடு வரை குறைக்கும் என்று எண்ணுவதாக சகோதரிகளான 60 வயதான திருவாட்டி அல்லியும் 62 வயதான திருவாட்டி மாலதியும் கூறினர்.
வேலைக்குச் செல்வோர், தனியாக வசிப்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கு இந்த முயற்சி துணையாக இருக்கும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.
“நான் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிகிறேன். சிலநேரம் சமைக்க இயலாமல் போனாலும் பசியோடு செல்ல வேண்டாம். பரபரப்பான சூழலிலும் 24 மணிநேரமும் இயங்கவுள்ள இந்த தானியங்கி உணவு விற்பனை இயந்திரத்தில் வந்து சேண்ட்விட்ச் போன்ற தேவையான உணவை எடுத்துப் பசியாறலாம். இது பயன்மிக்கது,” என்றார் திருவாட்டி அல்லி.
இந்த புதுமையான அணுகுமுறையைப் பாராட்டுவதாகச் சொன்னார்கள் திரு சந்திரா தங்கவேலு , 60 - திருவாட்டி ஜெயவள்ளி, 57, இணையர்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வரும் இவ்விணையர், உணவு சார்ந்த விருப்பங்களைத் தெரிவு செய்கையில் அது தொடர்பான மாற்று வாய்ப்புகளை இத்திட்டம் நல்குவதாகச் சொன்னார்கள்.
உடல்நலன் சார்ந்த காரணங்களால் இருவரும் பணிக்குச் செல்லவில்லை என்றும் அரசாங்கம் வழங்கும் இதர உதவிகளுடன் இத்திட்டம் அன்றாட உணவுக்கான தேவையில் முக்கிய ஆதரவை வழங்கும் என்றும் நம்புவதாகக் கூறினார் திருவாட்டி வள்ளி.
“வேலைவாய்ப்பு இல்லாதோரும் மருத்துவ உதவி தேவைப்படுவோரும் இத்திட்டத்தின் மூலமாக $3 அல்லது அதற்கும் குறைந்த விலையில் உணவை வாங்கலாம் என்பது நல்ல செய்தி. அவை நம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கப்பெறுவது நிதிச்சுமை,உடற்சுமை இரண்டையும் குறைக்கும்,” என்று சொன்னார் திரு சந்திரா தங்கவேலு.