சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2026ன் (Singapore Literature Prize) முதற்கட்டத் தேர்வின் நெடும்பட்டியல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) வெளியிடப்பட்டுள்ளது. இப்பரிசு தொடங்கப்பட்ட 34 ஆண்டுகளில் நெடும்பட்டியல் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை.
ஆங்கிலக் கவிதை, ஆங்கில உரைநடை, சீன உரைநடை ஆகிய மூன்று பிரிவுகளில் தலா 10 எழுத்தாளர்கள் என மொத்தம் 30 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதிலிருந்து இறுதிச் சுற்றில் இடம்பெறும் நூல்கள் தேர்வு செய்யப்படும்.
2024 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை வெளியிடப்பட்ட நூல்களிலிருந்து மொத்தம் 156 தகுதியான படைப்புகள் பெறப்பட்டன. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியான படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட பிரிவுகளுக்கு மட்டுமே இந்த நீண்ட பட்டியல் இடம்பெறுவதாக சிங்கப்பூர் புத்தக மன்றம் தெரிவித்தது. தமிழ், மலாய் மொழிகளுக்கான கவிதை, உரைநடைப் பிரிவுகளுக்குப் போதுமான படைப்புகள் இல்லாததால் நீண்ட பட்டியல் வெளியிடப்படவில்லை என்று அது குறிப்பிட்டது.
தரமான படைப்புகள் அதிகளவில் சமர்ப்பிக்கப்படுவதை அங்கீகரிக்கும் வகையில் நீண்ட பட்டியல் முறை தொடரும் என்று மன்றத்தில் தலைமை நிர்வாக இயக்குநர் திரு வில்லியம் புவான் தெரிவித்தார்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி, நாட்டின் மதிப்புமிக்க பன்மொழி இலக்கிய விருதாகக் கருதப்படுகிறது. புதிய மாற்றங்களின்படி, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் எழுத்தாளருக்கு $5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இம்முறை போட்டிப் பிரிவுகளின் எண்ணிக்கை 18லிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, தனித்தனியாக இருந்த புனைவு, அபுனைவு பிரிவுகள் ஒரே பிரிவாக்கப்பட்டுள்ளன.
இறுதிச் சுற்றுப் பட்டியல் (Shortlist) 2026 அக்டோபர் 13 அன்று வெளியிடப்படும். வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கு டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
