செவிப்புலனற்றவராக உள்ள திருவாட்டி ஏப்ரல் சியா, 1990களில் சாதாரண உயர்நிலைப் பள்ளி ஒன்றில் பயின்றபோது சைகை மொழி தெரியாத மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ளச் சிரமப்பட்டார்.
இருந்தபோதும் மனம் தளராத அவர், சிங்கப்பூர் செவிப்புலனற்றவர் சங்கம் நடத்தி வந்த பயிரலங்குகளில் தொடர்ந்து பங்கேற்றார். சிறுமியாக இருந்தபோதே பெற்றோர் தம்மை அத்தகைய பயிலரங்குகளுக்கு அழைத்துச் சென்றதைத் திருவாட்டி சியா நினைவுகூர்ந்தார்.
அந்தச் சங்கத்தைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்தும் அவர் உதவி பெற்றார்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் அரசாங்க ஊழியர் வேலை பெற்றுள்ள திருவாட்டி சியா, தற்போது அதே சங்கத்தில் இம்முறை சைகை மொழியைக் கற்பிக்கிறார். அங்கு அவர் சமூக உரைபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.
திருவாட்டி சியாவுக்கு கைகொடுத்த திட்டங்களுக்கு நன்கொடை நடை ஒன்றின்வழி திரட்டப்பட்ட 320,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை பயனளித்தது.
மரினா பேயிலும் கரையோரப் பூந்தோட்டத்திலும் மூன்று கிலோமீட்டர், ஐந்து கிலோமீட்டர் என இருவகை நடை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 25) நடைபெற்றது.
2025ல் தனது 70ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் அந்த அமைப்பு, செவிப்புலன் இழந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் சிங்கப்பூரில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது
நடையைத் தொடங்கி வைப்பதற்கு முன்பாக அதற்காகத் திரண்ட ஏறத்தாழ 1,500 பங்கேற்பாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், செவிப்புலனற்றோருக்குக் குரல்கொடுத்து விழிப்புணர்வை அதிகரித்த எஸ்ஏடெஃப் (SADeaf) அமைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகமானோரை ஒருங்கிணைக்கும் சிங்கப்பூரை உருவாக்குவதில் செவிப்புலன் இல்லாதோர் மட்டுமின்றி எல்லோர்க்கும் பங்கு உள்ளதாகத் திரு டோங் கூறினார்.