சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யூடிடி) மாணவர்களின் கண்டுபிடிப்புகள், புதிய தொழில் உருவாக்கத் திறனை மேம்படுத்த $35 மில்லியன் நிதியுதவி வழங்கப்படும்.
அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் (அலும்னி) அந்த நிதியில் உள்ளடக்கப்படுவர்.
‘டைவ்’ என்றழைக்கப்படும் ஒரு கல்வித் திட்டத்தின் முதலீடாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி குறித்து சாங்கி தொழிற்பூங்காவில் உள்ள எஸ்யூடிடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) நடந்த தொடக்க நிகழ்ச்சியில் அதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கல்வித் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த நகர்வுக்கான காரணங்கள் என்று நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் பூன் கொக் குவாங் தெரிவித்தார்.
கல்வி மானியங்கள், உலகில் உள்ள தலைசிறந்த கல்வி நிலையங்களுடன் இணைதல், வழிகாட்டிகளின் உதவியுடன் வலுவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றுடன் முதல் ஆண்டு மாணவர்களுக்கு தங்கியிருந்து பயிலும் கல்வி நிலையத்தை ஏற்படுத்துதல் ஆகியன திட்டத்தின் முக்கிய அங்கங்களாகும்.
பாரம்பரியக் கல்வி முறையில் இருந்து நகர்ந்து, புத்தாக்கச் சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்தெடுப்பதை டைவ் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. மாணவர்கள் தடையின்றி கற்பனையை வளர்த்து அவர்களது படைப்பாற்றலை சுதந்திரமாகச் செயல்படுத்தி ஆராய புதிய கல்வி முறை வழிவகை செய்யும்.
“தற்போதைய காலத்தில் மாணவர்களுக்கு அடிப்படை அறிவு மட்டும் போதாது. கற்பனை, படைப்பாற்றல், செயல்திறன் ஆகியவற்றுடன் உண்மையான பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதற்கான திறனை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்,” என்றார் பேராசிரியர் பூன்.
“செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மாதிரிகள் தயாரித்தல், அவற்றை சோதித்தல், யோசனைகளை உடனடியாக மறுஆய்வுக்கு உட்படுத்துதல், புதுமையான மதிப்பு மிகுந்தவற்றை உலகத்தில் உருவாக்குதல் போன்ற அறிவுத் திறன்களை மாணவர்கள் பெறவேண்டும். அதுவே உண்மையான திறனையும் படைப்பாற்றலையும் நோக்கிச் செல்லும் கல்வித் திட்டம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான பல்கலைக்கழகக் கல்வி பாடத்திட்டத்தைப் போல் இந்த டைவ் திட்டம் மாணவர்களுக்குக் கட்டாயம் அல்ல. அவரவர் தேர்வு செய்யும் பாடங்களில் அடிப்படைத் திறன்கள் பயிற்றுவிக்கப்படும் எனவும் பேராசிரியர் பூன் விளக்கினார்.

