அக்கம்பக்க மேம்பாட்டுத் திட்டங்கள் இரண்டின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளால் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 36,000 குடும்பங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரையுடன் கூடிய நடைபாதைகள், முதியோருக்கு உகந்த வசதிகள் போன்றவை புதிய வசதிகளில் அடங்கும். அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் (NRP), சிங்கப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்படும் 17 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு $165 மில்லியன் நிதி ஒதுக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்தார்.
புக்கிட் பாஞ்சாங், செம்பவாங், செங்காங் போன்ற வட்டாரங்களில் இத்தகைய புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அவற்றால் 25,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பாளர் கருத்துகளின் அடிப்படையில் ஒவ்வொரு புதுப்பிப்புத் திட்டமும் வடிவமைக்கப்படுவதாக வீவக தெரிவித்தது. கூரையுடன் கூடிய இணைப்புப் பாதைகள், அமர்வதற்கான இடங்கள், உடலுறுதிப் பயிற்சிக்கான வசதிகள் போன்றவை தொடர்பில் இவ்வாறு குடியிருப்பாளர்களின் கருத்துகள் திரட்டப்படுவதாக அது சொன்னது.
மேலும், முதியோர்க்கான மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பழைய குடியிருப்புகளில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட முதியோர்க்கு உகந்த வசதிகளை அமைத்துத் தரும் மேம்பாட்டுப் பணி கூடுதலாக 12 பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அங் மோ கியோ, புக்கிட் மேரா, தோ பாயோ போன்ற பகுதிகளைச் சேர்ந்த 11,000 குடும்பங்கள் இதன் மூலம் பயனடையும் என்று திரு லீ கூறினார்.
தோ பாயோ அக்கம்பக்கப் பூங்காவில் நடைபெற்ற கழகத்தின் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
“கழக வீடுகள் தற்போது சிங்கப்பூரர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பிடித்துள்ளன. எனவே அவற்றை வசிப்பதற்கு உகந்தவையாகவும் துடிப்புமிக்க இடங்களாகவும் காலத்துக்கேற்ற தேவைகளுக்கு ஈடுகொடுப்பவையாகவும் வைத்திருக்க தொடர்ந்து முயல்கிறோம்,” என்றார் திரு லீ.
‘என்ஆர்பி’ திட்டத்துக்கான முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதன்கீழ் மேற்கொள்ளப்பட்ட 229 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு $1.5 பில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள 17 திட்டங்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
முதியோர்க்கு உகந்த வசதிகளை ‘என்ஆர்பி’ திட்டத்தின்கீழ் அமைப்பதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். தற்போது ஒரு வீட்டுக்கு $6,100ஆக உள்ள அந்த ஒதுக்கீடு கிட்டத்தட்ட $6,600க்கு உயர்த்தப்படும். இத்தகைய மேம்பாடுகள் ‘ஏஜ் வெல் எஸ்ஜி’ எனும் தேசியத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் லீ கூறினார்.

