மோசடிச் செயல்களுக்காக வங்கிக் கணக்குகள் வாயிலாக பணத்தைக் கைமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
திங்கட்கிழமைக்கும் (செப்டம்பர் 9) புதன்கிழமைக்கும் (செப்டம்பர் 11) இடையே அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். அந்த சந்தேகநபர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்ற மோசமான குற்றங்கள் (சலுகை மீட்பு) சட்டம் 1992, தவறான கணினிப் பயன்பாட்டுச் சட்டம் 1993 ஆகியவற்றில் சென்ற ஆண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின்கீழ் சந்தேகநபர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்களில் 33 பேர் ஆண்கள், எஞ்சிய எழுவர் பெண்கள். அனைவரும் 18லிருந்து 43 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தங்களின் வங்கிக் கணக்குகள், சிங்பாஸ் விவரங்கள் ஆகியவற்றைப் பிறரிடம் விற்றது அல்லது ஒப்படைத்தது ஆகிய குற்றங்களை அவர்கள் புரிந்ததாக நம்பப்படுகிறது என்று ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) காவல்துறை தெரிவித்தது.
சந்தேகநபர்களில் சிலர், புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்தவுடன் அவற்றின் விவரங்களையும் அவற்றுக்கான ஏடிஎம் அட்டைகளையும் முன்பின் தெரியாதோரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் மூலம் குற்றக் கும்பல்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது, மோசடிச் செயல்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
வேறு சிலர், தங்களின் சிங்பாஸ் விவரங்களைக் குற்றக் கும்பல்களிடம் தந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் வாயிலாக குற்றக் கும்பல்கள் சந்தேகநபர்களின் அடையாள விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு விவகாரத்தில், சந்தேகநபர்களில் ஒருவர் பணத்துக்காகத் தனது சிங்பாஸ் விவரங்களை அடையாளம் தெரியாத ஒருவரிடம் விற்றதாக நம்பப்படுகிறது. சிங்பாஸ் விவரங்களை விலைக்கு வாங்கியவர், அவற்றைக் கொண்டு நான்கு வங்கிக் கணக்குளைத் திறந்து 500,000 வெள்ளிக்கும் அதிகமான கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சந்தேகநபர்கள் ஒவ்வொருவருக்கும் மூவாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

