பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் செல்வத்தை வெற்றியின் அளவுகோலாகக் கருதவில்லை என்றாலும், ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் பணமே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று நம்புவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
காப்புறுதி நிறுவனமான ‘ஏஐஏ’ வட்டார அளவில் நடத்திய ‘ரீதிங்க் ஹெல்தி’ என்ற ஆய்வு, தனிமனிதரின் நல்வாழ்வு, வெற்றி குறித்த பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
சீனா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிங்கப்பூரர்கள் மட்டுமே தங்களின் தனிப்பட்ட நல்வாழ்வை பொருளியல் வெற்றியோடு நேரடியாகத் தொடர்புபடுத்தியுள்ளனர்.
இத்தகைய சிந்தனைப்போக்கினால், தங்களின் நிதி இலக்குகளை அடைய முடியாதபோது தேவையற்ற மன அழுத்தத்தையும் மகிழ்ச்சியற்ற நிலையையும் அடைகின்றனர்.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு முதலீட்டு மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழக்கும் அபாயத்திற்கும் ஆளாகிறார்கள்.
ஆய்வில் தெரியவந்த மூன்று முக்கிய அம்சங்கள்
முதலாவது, அதிக வருமானம் ஈட்டுவது மட்டுமே ஒருவரைச் செல்வந்தராகக் காட்டிவிடாது என்று ஆய்வு சுட்டியது.
அண்மையில் நீதிமன்றத்திற்கு வந்த விவாகரத்து வழக்கு ஒன்றில், மாதம் $88,000க்கு மேல் சம்பாதித்த உயர் நிர்வாகி ஒருவர், தமது கட்டுப்பாடற்ற ஆடம்பரச் செலவுகளால் வங்கிக் கணக்கில் $13,000 மட்டுமே சேமிப்பு வைத்திருந்தது தெரியவந்தது.
மற்றது, சிங்கப்பூர் பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளின் செலவுகளுக்கே முன்னுரிமை கொடுத்து, குறைவாகவே சேமிக்கின்றனர் என ஆய்வு கூறுகிறது.
இதனால் 70, 80 வயதில் தங்களைக் கவனிக்கக்கூடப் பணமில்லாமல் தவிக்கின்றனர்.
எனவே, ஓய்வூதியத்திற்குப் பிள்ளைகளை நம்பியிருக்காமல், நிதிச் சுதந்திரத்திற்காக முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். இது ஒருவரையும் சாராமல் வாழ வைப்பதுடன், பிள்ளைகளுக்குப் பண நெருக்கடி ஏற்படும்போது உதவவும் வழிவகுக்கும்.
மூன்றாவது, ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகப் பணம் செலவழித்து விலையுயர்ந்த உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. சமச்சீரான உணவு, குறைந்த உப்பு, சர்க்கரை பயன்பாடு, பூங்காக்களில் இலவசமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சி போன்ற எளிய பழக்கவழக்கங்கள் மூலமே ஜப்பானிய முதியவர்களைப்போல 90 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ முடியும்.
பணம் வாழ்க்கைக்குத் தேவையானது என்றாலும், அதுவே வாழ்வின் ஆகச்சிறந்த மதிப்புமிக்க ஒன்றாக மாறிவிடாது. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதே உண்மையான வெற்றியாகும் என்று ஆய்வு குறிப்பிடுகிறது.

