சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மரின் பரேடில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கட்டுமான நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) 49,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பேல்-லிங்க் கன்ஸ்டிரக்ஷன் எனும் நிறுவனம், குடிக்க உகந்த நீர் செல்லும் நிலத்தடி குழாயைச் சேதப்படுத்தி தகுந்த அனுமதி பெறாமல் நீர்க்குழாய்ப் பணிகளை மேற்கொண்டாக தேசிய நீர் அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கூறியது.
அதனால் சென்ற ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி அருகிலுள்ள மரின் டிரைவ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பு வட்டாரத்தில் வெள்ளம் ஏற்பட்டு இடையூறாக அமைந்தது. சுமார் 1.1 மில்லியன் கேலன் அளவு நீர் வீணானது. வீணான நீரின் அளவு, ஒலிம்பிக் தரநிலைகளின்படி அமைக்கப்படும் நீச்சல் குளங்களில் இரண்டை நிரப்பக்கூடியது.
300 மில்லிமீட்டர் சுற்றளவைக் கொண்ட நிலத்தடி நீர்க் குழாயிலிருந்து நீர்ப் பீய்ச்சியடித்தது. ஸ்டில் ரோடு சவுத், மரின் டிரைவ் இரண்டிலும் அனைத்து நான்கு தடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது.
கசிவை அடையாளம் கண்டு நீர் வெளியாவதைத் தாங்கள் தடுத்தபோதும், அரை மணிநேரத்துக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் குறிப்பிட்டது. பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ள ஆக இடது புறத்தில் இருக்கும் சாலைத் தடத்தை ஒரு நாளுக்கு மேல் மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கழகம் விளக்கியது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர், “பழுதுபார்ப்புப் பணிகள் சிக்கலானவையாக இருந்தன. மறுநாள்தான் சேதமடைந்த குழாயை மறுபடியும் செயல்படுத்தவும் ஸ்டில் ரோடு சவுத்தை மறுபடியும் முழுமையாகத் திறக்கவும் முடிந்தது,” என்றார். மேலும், மரின் டிரைவில் உள்ள வீவக புளோக் 67ல் வெள்ள நீர் நுழைந்ததால் மினதூக்கி பழுதானது.
வெள்ளத்தால் அந்த புளோக்கில் உள்ள கடை ஒன்றிலும் சில மணிநேரத்துக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

