வெளிநாட்டவரைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு வரவழைத்த குற்றங்களில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர்கள் ஐவர் மீது வியாழக்கிழமை (ஜூலை 25) குற்றஞ்சாட்டப்பட்டது.
பணத்துக்காகப் போலி நிறுவனங்களைத் தொடங்கி வெளிநாட்டைச் சேர்ந்த பலருக்கு வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை மனிதவள அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.
டான் தாய் ஜி, 42, லியோங் குவாய் டோங், 53, சிம் கியன் பூன் டெரன்ஸ், 35, நியோ ஹோக் குவான் ராய், 46, செங் டீ ஹோவ், 40, ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஐந்து ஆடவர்கள்.
அவர்களில் லியோங் ஆக அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
செயல்படாத நிறுவனங்களுக்காக வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி பெற்றுத் தந்ததாக 66 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இதற்கிடையே, அதே குற்றத்துக்காக டான் 55 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
சிம் 18 குற்றச்சாட்டுகளையும் நியோவும் செங்கும் தலா 14 குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த சிங்கப்பூரர்கள் ஐவரின் பெயர்களில் மொத்தம் 13 போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“முறையாகச் செயல்படாத அந்த நிறுவனங்களுக்கு வெளிநாட்டவர்கள் தேவைப்படவில்லை. அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் அந்நிறுவனங்கள் முறையான வேலையில் அமர்த்தவில்லை,” என்று அமைச்சு விவரித்தது.
வெளிநாட்டவர்கள் எந்தெந்த வேலைகளில் பணியமர்த்தப்பட்டனர் என்பதையோ, அவர்களைச் சட்டவிரோதமாகப் பணியமர்த்தியதற்காக அந்த ஆடவர்கள் எவ்வளவு தொகை பெற்றுக்கொண்டனர் என்பதையோ நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
அவர்கள் புரிந்த குற்றங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது பற்றியும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.
அந்த ஐந்து ஆடவரின் வழக்குகள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ், வெளிநாடுகளைச் சேர்ந்த 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர், வேலை செய்யும் எண்ணமின்றி போலி நிறுவனங்கள் மூலம் வேலை அனுமதி அட்டையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்த 17 பேரில் 10 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு கூறியது.

