சிங்கப்பூரில் நடைபெற்ற பல்வேறு மோசடிச் சம்பவங்களின் தொடர்பில் 221 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவற்றில் 5.3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகத் தொகையைப் பலர் பறிகொடுத்ததாக நம்பப்படுகிறது.
மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுபவர்களும் மோசடிச் செயல்களுக்காகப் பிறரிடம் பணத்தை ஒப்படைத்ததாகக் கூறப்படுபவர்களும் அவர்களில் அடங்குவர்.
பிப்ரவரி மாதம் 26ஆம் தேதிக்கும் மார்ச் மாதம் 11ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஏழு நிலக் காவற்படைப் பிரிவு அதிகாரிகளும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் சிக்கினர்.
சந்தேக நபர்களில் 136 ஆண்களும் 85 பெண்களும் அடங்குவர். அவர்கள் 1,080க்கும் மேலான மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் 17க்கும் 81 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என காவல்துறை வியாழக்கிழமை (மார்ச் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மின்வர்த்தக மோசடி, நண்பரைப் போல் நடித்து ஏமாற்றும் மோசடி, வேலை தருவதாகக் கூறி மேற்கொள்ளப்படும் மோசடி, முதலீட்டு மோசடி முதலியவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயல்வது, சட்டவிரோதக் கட்டணச் சேவைகள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

