ஐம்பதாண்டுத் திருமண வாழ்வில் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளான மாது ஒருவருக்கு கணவருக்கு எதிராகத் தனிநபர் பாதுகாப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கணவர் தம் மனைவியைத் தடியால் தாக்குவது, ஆபாசமாக வசைபாடுவது போன்ற துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்டோபர் 22ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோபத்தில் வீட்டில் உள்ள பொருள்களை வீசி உடைப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தத் தம்பதியருக்கு இரு மகள்கள். அவர்களில் ஒருவர் மாண்டுவிட்டார்.
கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க தனிநபர் பாதுகாப்பு ஆணை, மனைவியுடன் தொடர்புகொள்வதைத் தடை செய்யும் ஆணை, மனைவியின் படுக்கையறைக்குள் நுழையத் தடைவிதிக்கும் ஆணை ஆகியவற்றை நீதிபதி சோ கியான் பெங் பிறப்பித்தார்.
தம்பதியர் இருவரும் ஆலோசனை அமர்வில் கலந்துகொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குமுன் பேரங்காடிக் காசாளராக அந்த மாது பணிபுரிந்தபோது அவரின் கண்ணில் கணவர் குத்தினார்.
தன் பாட்டியைத் தாத்தா அடித்ததையும் திட்டியதையும் நேரில் பார்த்ததாகப் பேரன் சாட்சியமளித்தார்.
மேலும், குடும்பநலனுக்காகப் பாட்டி அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழ்ந்ததாகவும் அவர் கூறினார்.
வீட்டைவிட்டுத் துரத்தியதால், தம் இளைய மகள் உயிர்மாய்த்துக் கொண்டதாக மனைவி நீதிமன்றத்தில் விவரித்தபோது கணவர் சிரித்ததாகக் கூறப்பட்டது.
கணவரின் நடத்தை மாற வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் குடும்ப வன்முறையில் ஈடுபடும் அபாயம் உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
