தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூவாண்டுகளில் 50,000 புதிய பிடிஓ வீடுகள்

2 mins read
3c4c66a7-6e07-4df8-a293-e083f873d1e1
கோப்புப் படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய வளர்ச்சி அமைச்சு, 50,000க்கும் அதிகமான புதிய தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை விற்பனைக்கு விடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்துள்ளார்.

அந்த வீடுகள் உட்லண்ட்ஸ், பே‌ஷோர், மவுன்ட் பிளசண்ட் உள்ளிட்ட வட்டாரங்களில் அமையும். பிடிஓ வீடுகளுக்கான விண்ணப்பங்கள், கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்தைய காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கணிசமான அளவு குறைந்து நிலைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டு, முதன்முறையாக பிடிஓ வீடுகளை வாங்கிய குடும்பங்களில் பத்தில் எட்டுக்கும் அதிகமானவை மாதந்தோறும் வீட்டுக் கடனை அடைக்க சொந்தப் பணத்தை அறவே பயன்படுத்தவில்லை அல்லது அதிகம் பயன்படுத்தவில்லை. இத்தகைய கட்டுப்படியாகும் நிலை, லண்டன், சிட்னி, ஹாங்காங் போன்ற முக்கிய நகரங்களில் இல்லை என்பதை திரு வோங் சுட்டினார். ஆனால், சிங்கப்பூர் இதனைச் சாதித்துள்ளது என்றார் அவர்.

காத்திருப்பு நேரம் குறைவாக இருப்பதால் சில சிங்கப்பூரர்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்க விரும்புவதுண்டு. எனினும், மறுவிற்பனை வீட்டு விலை அதிகமாக இருப்பது அவர்களுக்கு கவலை தருவதாகப் பிரதமர் சுட்டினார். வீட்டு விலை தணிப்பு நடவடிக்கைகள், ஒரு கட்டத்தில் மறுவிற்பனை வீட்டுச் சந்தையை நிலைப்படுத்தும் என்று திரு வோங் நம்பிக்கை அளித்தார்.

இந்நிலையில், மூவாண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட சுமார் 3,800 வீடுகளை வீவக இந்த ஆண்டு விற்பனைக்கு விடும். இது இந்த ஆண்டில் விற்பனைக்கு விடப்படவிருக்கும் மொத்த வீடுகளில் 20 விழுக்காடு. மேலும், சென்ற வாரம் இடம்பெற்ற எஞ்சிய வீட்டு விற்பனை நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவில் தீவு முழுவதும் ஏறத்தாழ 5,500 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்