துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். மணிலாவில் செப்டம்பர் 19 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் 58வது ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் கூட்டத்திலும் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வார்.
உலகளாவிய பொருளியல் நிச்சயமற்ற சூழலுக்கு இடையே, ஆசியான் வட்டாரத்தின் பொருளியல் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது, வட்டார மீள்திறனையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
பிலிப்பீன்ஸ் 2026ல் ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளது. வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மாற்றம், மின்னிலக்கப் பொருளியல், செயற்கை நுண்ணறிவு, நீடித்த நிலைத்தன்மை போன்ற புதிய வளர்ச்சித் துறைகளில் அதன் தலைமைத்துவ முன்னுரிமைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்வர்.
சரக்கு வர்த்தக உடன்பாடு, சேவை வர்த்தக உடன்பாடு போன்ற முக்கியப் பொருளியல் ஒப்பந்தங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடுவர்.
ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருளியல் அமைச்சர்களையும் ஆசியான் அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவர்.
இந்தக் கூட்டத்திற்கிடையே, துணைப் பிரதமர் கான், பிற நாட்டு அமைச்சர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளையும் நடத்துவார். வர்த்தக, தொழில்துறை அமைச்சின் அதிகாரிகளும் அவருடன் செல்வதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
