வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் அவரது குடியிருப்புச் சொத்தை அடைமானமாக வைத்து, ஆறு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான வீட்டுக் கடன்களைப் பெற முயன்றதாக நான்கு ஆடவர்கள்மீது செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) குற்றம் சாட்டப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்போல் ஆள்மாறாட்டம் செய்தது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது, சொத்து மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்ய ஏதுவாக உரிமையாளரை ஏமாற்றி வீட்டைவிட்டு வெளியேற்றியது போன்ற சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் காவல்துறை திங்கட்கிழமை தெரிவித்தது.
27 முதல் 39 வயதிற்குட்பட்ட அந்த நான்கு சந்தேகப் பேர்வழிகளும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.
இந்தச் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, 39 வயது ஆடவர் வீட்டின் உரிமையாளர்போல் நடித்து, போலி அடையாள ஆவணங்களைக் கொண்டு கடன்களுக்கு விண்ணப்பித்தார். 36 வயது ஆடவர் போலி அடையாள அட்டையைத் தயாரிக்க உதவினார்.
27 வயது ஆடவர் வீட்டின் உரிமையாளரை இருமுறை பொய்யான காரணங்களைக் கூறி வீட்டைவிட்டு வெளியே அழைத்துச் சென்றார். உரிமையாளர் வீட்டில் இல்லாத வேளையில், மதிப்பீட்டாளர்கள் வீட்டிற்குள் சென்று மதிப்பீடு செய்ய 29 வயது ஆடவர் வழிவகை செய்தார்.
இந்தச் சூழ்ச்சியின் மூலம் இரு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து கிட்டத்தட்ட ஆறு மில்லியன் வெள்ளி கடன் பெற அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
தன் பெயரில் கடன் கேட்டு விண்ணப்பிக்காத நிலையிலும், தனது சொத்தின்மீது உரிமைத் தடை ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை ஏப்ரல் 3ஆம் தேதி, உரிமையாளர் கண்டறிந்தார். அவர் அளித்த புகாரின்பேரில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆடவர் நால்வரும் போலி ஆவணங்கள்மூலம் கடனுக்கு விண்ணப்பித்தது விசாரணையில் உறுதியானது.
தொடர் நடவடிக்கையாக ஏப்ரல் 14, 15 தேதிகளில் நால்வரும் பிடிபட்டனர். போலி அடையாள அட்டையும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருவதாகக் காவல்துறை கூறியது.
மோசடிக்கு உடந்தையாக இருந்ததற்காக இவர்கள்மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
