அதிகாரிகளைக் கடித்த 64 வயது ஆடவர் கைது

அதிகாரிகளைக் கடித்த 64 வயது ஆடவர் கைது

படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

05 Nov 2026 - 6:10 pm

1 mins read

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் 64 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) கைது செய்யப்பட்டார்.

இந்தச் சோதனையின்போது பிடிபட்ட பல்வேறு போதைப்பொருளில் ஏறத்தாழ 1.5 கிலோகிராம் கஞ்சாவும் அடங்கும். மார்சிலிங் சாலை வட்டாரத்திலுள்ள ஒரு குடியிருப்புப் பிரிவில் இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது நடவடிக்கையின்போது, அந்த ஆடவர் அதிகாரிகளுடன் மிகக் கடுமையாகப் போராடி வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதிகாரி ஒருவரின் ஜீன்ஸ் காற்சட்டை வழியே அவரது தொடையில் கடித்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அவர் மேலும் இரண்டு அதிகாரிகளின் மீது எச்சில் துப்பினார் என்றும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வியாழக்கிழமையன்று (நவம்பர் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான 1,554 கிராம் கஞ்சா, 166 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 25 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மொத்த மதிப்பு $55,000க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, மொத்தம் $356 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், தொற்றுநோய்கள் ஏதேனும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்